மிகப்பெரிய சதி... தமிழகத்தில் கலவரத்தை தூண்டதிட்டம்... சசிகலா மீது சிவி சண்முகம் பகீர் புகார்..!

By vinoth kumarFirst Published Feb 6, 2021, 2:55 PM IST
Highlights

யார் அதிமுகவினர், இரட்டை இலை யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்திவிட்டது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

யார் அதிமுகவினர், இரட்டை இலை யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்திவிட்டது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுக உறுப்பினர் அட்டையை சசிகலா புதுப்பிக்கவில்லை. அதிமுகவில் உறுப்பினராகவே இல்லாத சசிகலா, கட்சி கொடியை பயன்படுத்த முடியாது என அண்மையில் அதிமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தனர். ஆனால், தினகரன் தரப்போ, முப்படை தளபதிகளிடமே புகார் கொடுத்தாலும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் அவர் கட்சி கொடியை பயன்படுத்த உரிமை உண்டு என்றார். 

இதனைத் தொடர்ந்து சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அனுமதி கோரி அமமுக நிர்வாகி செந்தமிழன் போலீசில் மனு கொடுத்திருந்தார். ஆனால் சென்னை போலீசார் இதற்கு அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் டிஜிபி அலுவலகத்துக்கு அமைச்சர்கள் தங்கமணி, சிவி சண்முகம், ஜெயக்குமார், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் சென்றனர். சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எதிராக டிஜிபியிடம் அமைச்சர்கள் மீண்டும் புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்;- சசிகலா சென்னை திரும்புவதால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று தினகரன் சவால் விடுத்துள்ளார். சசிகலா ஆதரவாளர்கள் தற்கொலைப்படையாக மாறப்போவதாக மிரட்டல் விடுக்கின்றனர். சசிகலா ஆதரவாளர்களால் தமிழகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த தினகரன் உள்ளிட்டோர் சதி செய்து வருகின்றனர். அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மதுசூதனன் நிர்வாகிகளாக இருக்கும் கட்சியே அதிமுக என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஊரை கொள்ளையடித்து சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா 4 வருடங்கள் சிறையில் இருந்தார் என அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். 

சசிகலா தொடர்ந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் அதிமுக யாருக்கு உரியது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சசிகலா செயல்பட்டு வருகிறார். சசிகலா தமிழகம் திரும்பும் போது கலவரத்தை தூண்டி அதிமுக மீது பழிபோட திட்டமிட்டுள்ளனர். கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் சசிகலா, தினகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இல்லை, அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை. சசிகலா அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லை என்ற அடிப்படையில் கொடியை பயன்படுத்தக்கூடாது என்றார். 

click me!