
ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல விமானம் வந்த போது அதை வேண்டாம் என்று தடுத்தது யார் என முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் டிசம்பர் 5 ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அவரை யாரும் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை. இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்தில் பி.ஹெச்.பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் கடந்த 2015 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மௌண்ட் எலிசபெத் மருத்துவனைக்கு ஜெயலலிதாவை சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பாண்டியன் தெரிவித்தார்.
மத்திய அரசின் அனுமதியுடன் அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்ல விமானம் கொண்டுவரப்பட்டபோது, அதை வேண்டாம் என தடுத்தது யார்? என அவர் கேள்வி எழுப்பினர். இதில் மர்மம் உள்ளது என்றும் பாண்டியன் சந்தேகம் எழுப்பினார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்றும் பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார்.