
சேலம்-ராம்நகரில் உள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் செல்வ கணபதி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் பைக் எரிந்து சேதமடைந்தது.
சேலம் மாவட்ட திமுகவில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையேயான உட்கட்சிப்பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சேலம் மாவட்ட திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதையொட்டி சேலத்தில் 27 வது வார்டு அரிசிப்பாளையத்தில் ராஜேந்திரன் தரப்பினர் தி.மு.க உறுப்பினர் படிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வீரபாண்டி ராஜா ஆதரவாளரான செல்வகணபதி தரப்பினரும் உறுப்பினர் படிவம் கொடுக்கத் தொடங்கினர்.
இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதன் உச்சகட்டமாக இரு தரப்பினரும் கத்தியால் குத்திக்கொண்டார்கள். இதில் ராஜேந்திரன் தரப்பில் சுரேஷ், பிரகாஷ் என்பவர்களும் டி.எம்.செல்வகணபதி தரப்பில் வினோத்குமார், வரதன் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் சேலம்-ராம்நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் செல்வ கணபதி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் பைக் எரிந்து சேதமடைந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.