யாரோ ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசியதற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பாக முடியும்? அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் யாரோ பெட்ரோல் குண்டுவீசியுள்ளனர்.
பெட்ரோல் குண்டு சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்தாலும் இது தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஆளுநர் மாளிகையின் வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது. யாரோ ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசியதற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பாக முடியும்? அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் யாரோ பெட்ரோல் குண்டுவீசியுள்ளனர்.
பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகை முன்பு சாலையில் வீசப்பட்டுள்ளது. சாலையில் போகிற போக்கில் பெட்ரோல் குண்டை வீசிச்சென்றால் என்ன செய்ய முடியும்? இதில் எந்த உளவுத்துறை தோல்வியும் இல்லை. சிறையில் இருந்து வந்தவர் போகிற போக்கில் செய்த செயலுக்கு அரசை குற்றம்சாட்டுவதா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பினார்.
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வெறுப்புணர்வை காட்டவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் இல்லை. இதை வைத்து பாஜக அரசியல் செய்தாலும் இது தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. ஆளுநர் உடன் நாங்கள் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. அவர் மாநில பாஜக தலைவர் போல குற்றச்சாட்டுகளை கூறும் போது, அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.