
திருச்சி உழவர் சந்தையில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டிடிவி தினகரனின் பொதுக்கூட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.
திருச்சியில் அதிமுக அம்மா அணி சார்பில், செப்டம்பர் 19 ஆம் தேதி நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினரகன் தரப்பு முடிவு செய்திருந்தது.
இந்த பொதுக்கூட்டத்துக்கு, சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, அனுமதி தர அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி திருச்சி மாவட்ட அதிமுக அம்மா அணி செயலாளர் ஸ்ரீனிவாசன் , சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, திருச்சியில் டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.
திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு, போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவும் பிறப்பித்துள்ளது.