நீட் உள்பட எல்லா நுழைவுத் தேர்வுகளையும் நிரந்தரமாக ரத்து பண்ணுங்க... பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பரபர கடிதம்..!

By Asianet TamilFirst Published Jun 6, 2021, 10:12 PM IST
Highlights

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மட்டுமல்லாமல், அனைத்து கல்லூரிப் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வை நிரந்தமாக ரத்து செய்யும் வகையில் ஒரு கொள்கை முடிவைஎடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  
 

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், “மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வினை ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ந்து எதிர்த்து வந்தவர் ஜெயலலிதா. 2011-ஆம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வினை அறிமுகப்படுத்த அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்தபோது, அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தனது கடுமையான ஆட்சேபனையை கடிதம் வாயிலாக அப்போதைய பிரதமருக்குத் தெரிவித்தார். பின்னர், 2012ஆம் ஆண்டு மத்திய அரசால் அரசாணை வெளியிடப்பட்டபோது, தனது கடுமையான எதிர்ப்பினை அவர் பதிவு செய்ததோடு, தன் இறுதி மூச்சு வரை அதே நிலைப்பாட்டில் இருந்தார்.
2006ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி படிப்புகளில் சேர்க்கையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றியது உள்பட, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்காக 2005ஆம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி, 2017-ஆம் ஆண்டு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மருத்துவச் சேர்க்கை அமையும் வகையில், இரண்டு சட்டமுன்வடிவுகள், அதாவது 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்டமுன்வடிவு மற்றும் 2017-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்ச்கைச் சட்டமுன்வடிவு ஆகியவை ஒருமனதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எதிர்பாரதவிதமாக அது பயனளிக்கவில்லை.
இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் கலந்து கொள்ள கீழ்க்காணும் சங்கடங்களை மேற்கொள்கிறார்கள் என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1. நுழைவுத் தேர்வுக்கான வினாக்கள் மத்திய அரசின் பாடத் திட்டங்களை, அதாவது என்சிஇஆர்டி / சிபிஎஸ்இ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், மாநில அரசால் 12-ம் வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களில் பயின்றவர்கள் நீட் தேர்வில் போட்டியிடுவது சமபலம் வாய்ந்த களமாக இருக்காது என்பதால், நீட் தேர்வை எழுதுவதற்கு தனியாக பயிற்சி எடுக்க வேண்டியது மிக அவசியம்.
இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில், ஊரகப் பகுதி மாணவர்கள் மற்றும் பின்தங்கிய சமூகப் பொருளாதார பின்னணியைக் கொண்ட மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியயது. இதற்குக் காரணம், அந்தப் பகுதிகளில் தேவையான பயிற்சி நிலையங்கள் இல்லாததும், குறித்த சமயத்தில் அதற்குத் தேவையான புத்தகங்களை பெறமுடியாததும்தான். பயிற்சி நிலையங்களை அணுகவும், பயிற்சிக்குத் தேவையான புத்தகங்களை பெறவும் நிதியும், அவர்கள் வசிக்கும் இருப்பிடமும் இடம் தராததால், நீட் தேர்வு என்பது சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை ஊரகப் பகுதி மாணவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலை ஊரகப் பகுதி மாணவர்களிடம் காணப்படுகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு அதன் காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஊரகப் பகுதி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் பட்சத்தில், ஊரகப் பகுதிகளில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறை ஓரளவுக்கு குறைக்கப்படும்.  பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்றபோது, தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக ஏழை மற்றும் விளிம்பு நிலை மாணவர்கள், அதிகம் இருந்தனர். ஆனால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகம், விளிம்பு நிலை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் நுழைவதை கடினமாக்கிவிட்டது.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை அனுமதித்தது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கொரோனா தொற்று நோய் காரணமாக 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது போன்ற தங்களின் முத்தான அறிவிப்புகள் நல்ல வரவேற்பினையும், பாராட்டினையும் பெற்றுள்ளன. இதேபோன்று, மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மட்டுமல்லாமல், அனைத்து கல்லூரிப் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வை நிரந்தமாக ரத்து செய்யும் வகையில் ஒரு கொள்கை முடிவை தாங்கள் எடுக்க வேண்டும் என்று தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதோடு, மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அனைத்து படிப்புகளுக்குமான மாணவ, மாணவியர் சேர்க்கையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற நடவடிக்கையை தாங்கள் எடுக்கும்பட்சத்தில் தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் தங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!