ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யுறீங்க... எப்போது புரிஞ்சுக்க போறீங்க... எச்சரிக்கும் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Sep 27, 2020, 11:46 AM IST
Highlights

ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நுழைவு வாயில் முன்பாக தந்தை பெரியாரின் மார்பளவு சிலை உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு இருப்பதையும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த மணிகண்டன் காவல்துறையினர், பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த செருப்பு மாலையை உடனடியாக அகற்றிவிட்டு, சிலை மீது பூசப்பட்டிருந்த காவி சாயத்தை துடைத்து தூய்மை படுத்தினர். நடு இரவில் மர்ம நபர்கள், யாருக்கும் தெரியாமல் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு இந்தகைய செயலில் ஈடுபட்டிருக்கு குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரி தி.மு.க., தி.க மற்றும் சிபிஐ(எம்) கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத்தில்;- ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

திருச்சி - இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!  பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

click me!