Periyar Statue broken : பெரியார் சிலை மூக்கு உடைப்பு! போலீசில் சரணடைந்த செல்லக்கிளியிடம் தீவிர விசாரணை!

By manimegalai aFirst Published Dec 27, 2021, 11:19 AM IST
Highlights

அதிமுக ஆட்சி காலத்தில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தட்ட போது, திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பெரியாரிய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தட்ட போது, திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பெரியாரிய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது.

தமிழ்நாட்டு அரசியலில் இன்றுவரை அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவர் பெரியார். சமீபத்திய வருடங்களாக பெரியார் குறித்த கருத்துகள் வட மாநிலங்களில் பரவி வருகிறது. திராவிட கட்சிகளின் அடிநாதமாய் வழங்கும் பெரியாரிய கருத்துகளை எதிர்தே பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. பெரியார் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அவர் கூறிச்சென்ற கருத்துகள், இங்கு ஒவ்வொரு நாளும் பேசு பொருளாக மாறி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பெரியாரின் சிலைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாழும் காலத்திலேயே பல்வேறு அவமரியாதைகளை சந்தித்த போதிலும், கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்து மறைந்த பெரியாரின் சிலைகள் சேதப்படுப்பட்ட நிகழ்வுகள் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஊரிலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட போதெல்லாம், திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு பெரியாரிய அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. அப்போதையை எடப்பாடி பழனிசாமி அரசு பா.ஜ.க.-வுக்கு அஞ்சி நடுங்கி இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின், தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பெரியாரின் கனவுகள், அவரது கொள்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததன் மூலம், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய பெருமைக்குரியவராக மு.க.ஸ்டாலின், பாராட்டப்பட்டார். அதேபோல் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதியை சமூகநீதி நாளாகவும் முதலமைச்சர் அறிவித்தார். இதற்காக அரசியல் கட்சிகள், பெரியாரிய அமைப்புகள் அவரை வெகுவாக பாராட்டின. பெரியார் காட்டிய திராவிட சித்தாந்த வழியில் தான் தமது அரசு செயல்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும், பெரியார் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. சென்னை பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் உள்ள மணியம்மை சிலைக்கு நேற்ற ஒரு மர்ம நபர் பட்டுப்புடவையை போர்த்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவி வேட்டிய கட்டிய நபரே மணியம்மை சிலையை அவமரியாதை செய்ததாக திராவிடர் கழகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கருப்பு வேட்டி கட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மணியம்மை சிலைக்கு பட்டுப்புடவையை போர்த்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் தான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் மூக்கு கண்ணாடி உடைந்து கீழே விழுந்துள்ளது. சிலையின் மூக்கு பகுதியும் உடைந்துள்ளது. இது தொடர்பாக பொன்னேரி காவல் நிலையத்தில் செல்லக்கிளி என்பவர் சரணடைந்துள்ளார். பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதாகவும் அவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் பெரியார் சிலையை துணியால் மூடினர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் pic.twitter.com/DWRDSeAAfj

— Balasubramani க.பாலசுப்ரமணி (@balasubramanikk)

சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலையை பார்வையிட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் பெரியாரிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பொன்னேரி பேருந்து நிலையம் அருகே நேற்று பா.ஜ.க. பயிற்சி வகுப்பு நடைபெற்ற நிலையில் இன்று பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

 

பெரியார் சிலையை சேதப்படுத்துவதால் அவரை அவமதித்து விட முடியாது. பெரியார் என்பது வெறும் சிலை அல்ல, அவர் ஒரு கொள்கை என்றும் திராவிடர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிலை சேதத்திற்கு காரணமான அனைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெரியாரிய உணர்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். பெரியார் சிலை அருகே பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

click me!