தினகரன் வேட்பாளருக்கு தண்ணி காட்டுவாரா ஓபிஎஸ்? சொந்தத் தொகுதியில் தயாராகும் பலப்பரீட்சை..!

By Asianet TamilFirst Published Jan 13, 2019, 4:41 PM IST
Highlights

தனது சொந்தத் தொகுதியான பெரியகுளத்தில் பலத்தை காட்டும் தீவிர முனைப்பில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இறங்கியிருக்கிறார். 

தனது சொந்தத் தொகுதியான பெரியகுளத்தில் பலத்தை காட்டும் தீவிர முனைப்பில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இறங்கியிருக்கிறார். 

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதி பெரியகுளம். இரண்டு முறை இங்கே எம்.எல்.ஏ.வாகத் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். தொகுதி மறுசீரமைப்பில் தனித் தொகுதியாக பெரியகுளம் மாறியதால், போடி தொகுதிக்கு மாற வேண்டிய நிலை ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டது. கடந்த 2011-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், 2016-ல் அதிமுக போட்டியிட்டு வென்றது.

 

அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு தன் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஓபிஎஸுடன் செல்லாமல் சசிகலா அணியில் இருந்தார். ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்புக்கு பிறகும் தங்கதமிழ்ச்செல்வத்துடன் இணைந்து சசிகலா - தினகரன் அணியிலேயே நீடித்தார். இதன் காரணமாகவே கதிர்காமு மீது ஓபிஎஸ் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். 

இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டபோது, ஆண்டிப்பட்டியையும் பெரியகுளத்தையும் ஓபிஎஸ் கேட்டு வாங்கிகொண்டதற்கு இதுதான் காராணம். தங்கத் தமிழ்ச்செல்வனையும் கதிர்காமுவையும் எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் காத்திருக்கிறார். குறிப்பாக தனது சொந்தத் தொகுதியான பெரியகுளத்தில் கதிர்காமுவை தோற்கடித்த ஆக வேண்டும் தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.

 

தற்போது பெரியகுளம் இடைத்தேர்தல் பணியை தனது மகன் ரவீந்திரநாத்துக்கு சத்தமில்லாமல் கொடுத்திருக்கிறார். பெரியகுளத்தில் அதிமுக சார்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பும் அவரது மகனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் ரவீந்திரநாத்தைச் சுற்றி வருகின்றனர். ரவீந்திரநாத் கைகாட்டும் வேட்பாளருக்கே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தேனி மாவட்ட அதிமுகவினர் கூறுகிறார்கள்.

மேலும் தினகரன் அணியைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையிலும் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக அமமுகவின் பூத் கமிட்டியினருக்கு வலை வீசப்பட்டுவருகிறது. சொந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது தன்மான பிரச்னை என்பதால், பெரியகுளத்தில் எந்தப் பலப்பரீட்சைக்கும் தயாராகி வருகிறார் ஓபிஎஸ்.

click me!