தலைவா... டைம் டூ லீட்... நடிகர் விஜய் அரசியலில் குதிக்க சரியான நேரம் இது தானா..?

By Asianet TamilFirst Published Oct 26, 2021, 4:30 PM IST
Highlights

கால் நூற்றாண்டாக நடிகர் ரஜினியை சுற்றிக்கொண்டிருந்த கேள்வி, இப்போது  நடிகர் விஜய்க்கு மாறிவிட்டது. யெஸ், நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விதான் அது. தொண்ணூறுகளிலும் புத்தாயிரத்திலும் இயக்குநரின் கதைகளில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் விஜய், கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியல் கருத்தை வெளிப்படுத்தும் வகையிலான படங்களில் நடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். 

நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து‘டைம் டூ லீட்’  என்று நடிகர் விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.  

கால் நூற்றாண்டாக நடிகர் ரஜினியை சுற்றிக்கொண்டிருந்த கேள்வி, இப்போது  நடிகர் விஜய்க்கு மாறிவிட்டது. யெஸ், நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்விதான் அது. தொண்ணூறுகளிலும் புத்தாயிரத்திலும் இயக்குநரின் கதைகளில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் விஜய், கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியல் கருத்தை வெளிப்படுத்தும் வகையிலான படங்களில் நடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘காவலன்’ தொடங்கி இப்போது வரை அரசியல் ரீதியில் விஜய் அடிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

 ‘காவலன்’ படவெளியீட்டின்போது கண்ணுக்கே தெரியாத சிக்கல்கள் எல்லாம் அன்றைய ஆளுங்கட்சியான திமுக மூலம் பின்னப்பட, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அணிலாக அதிமுகவை ஆதரிக்க வேண்டிய நிலை விஜய்க்கு ஏற்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து ‘தலைவா’ படம் வெளியீட்டுக்கு வந்தபோது, அன்றைய அதிமுக ஆட்சியால் வந்த சிக்கல், இரண்டு ஆட்சியாளர்களுமே ஒன்றுதான் என்ற எண்ணத்தை விஜய்க்குள் விதைத்ததாகச் சொல்கிறார்கள் அவருடைய நலவிரும்பிகள். அதன்பிறகே அரசியல் சார்ந்த திரைக்கதை இருக்கும்படி தன் படத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றார் விஜய். ‘கத்தி’யில் 2ஜி முறைகேடு, ‘மெர்ச’லில் ஜி.எஸ்.டி குறைபாடு.  ‘சர்க்கா’ரில் கள்ள ஓட்டு விவகாரம் என அரசியலைத் தொட்டு பேசியது விஜய் படங்கள். அவரை ஜோசப் விஜய் என்று மத அடையாளத்தோடு அழைத்தபோதும், ‘அதுதான் என் பெயர்’ என்று சொல்லாமல் லெட்டர் பேடிலேயே அதைக் குறிப்பிட்டு விஜய் வெளியிட்ட அறிக்கை, அவர் அரசியலில் முளைவிடத் தொடங்கியதை எடுத்துக்காட்டியது. 

‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது வருமான வரித் துறையின் மூலம் விஜய் அலைகழிக்கப்பட்டதாகவே அவருடைய ரசிகர்கள் கொந்தளித்தனர். அதற்கேற்ப சமூக ஊடகங்களில் நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறதோ அதே அளவுக்கு எதிர்ப்பாளர்களும் உருவாகியிருப்பதையும் காண முடிந்தது. குறிப்பாக, இப்போது விஜய்க்கு எதிராக வலதுசாரி எதிர்ப்பாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். நடிகர் விஜய்க்கு எதிராக சிறு துரும்பு கிடைத்தாலும், சமூக ஊடகங்களில் அதை இரும்பாக்கிவிடுகிறார்கள்.

சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டும் விவகாரத்தில் நடிகர் விஜய்யை, ‘ரியல் ஹீரோ’வாக இருங்கள் என்று நீதிமன்றம் விமர்சித்ததும், அதை உடனே டிரெண்ட் ஆக்கப்பட்டது. நடிகர் விஜய் வரி கட்டாதவர் என்ற பிம்பமும் சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்டது. இப்படி விஜய்யை அரசியல் சுற்றிக்கொண்டிருக்கும் வேளையில்தான், ஊரக உள்ளாட்சித் தேர்தலும் வந்தது. 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவருடைய இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்டு 110 இடங்களில் வெற்றி பெற்றதாக அவருடைய ரசிகர்கள் அகமகிழ்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் நடிகர் விஜய்யைச் சந்தித்து ஆசியும் பெற்றார்கள்.

2005-ஆம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த் அரசியலில் குதிப்பதற்கு முன்பாக, அவருடைய ரசிகர்கள் 2001 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விஜயகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அப்போது பேசுபொருளானது. இப்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்ற வெற்றியும் பேசுபொருளாகியிருக்கிறது. அரசியலில் காலடி எடுத்து வைக்க, ஆழம் பார்த்து வரும் நடிகர் விஜய், தன்னைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் இருக்கக் கூடாது என்பதிலும் தீர்க்கமாகவே இருக்கிறார். அதன் வெளிப்பாடுதான். ‘தனி நீதிபதியின் கருத்து என்னை புண்படுத்தியதாக’ தொடரப்பட்ட வழக்கு எனலாம். அரசியல் என்ற சுனாமியில் நீந்த நடிகர் விஜய் எப்போதோ முடிவு செய்துவிட்டார். அது எப்போது என்பதுதான் கேள்வி. அதற்கு, ‘டைம் டூ லீட் மாப்ள’ என்று நடிகர் விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் இட்ட ட்விட்டர் பதிவு, விஜய்க்கே பதில் சொல்வதைப் போல அமைந்திருக்கிறது. இப்போது ஒரு கேள்வி. ‘தலைவா’ படத்தின் டேக் லைன் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ‘டைம் டூ லீட்!’

click me!