சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன்..! தலைமைச் செயலகம் வந்த கனிமொழி..! திடீர் பரோல் பின்னணி..!

By Selva KathirFirst Published Jun 29, 2021, 11:52 AM IST
Highlights

திமுக மகளிர் அணிச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் வந்திருந்தார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் தலைமச் செயலகம் வருகை தந்தார். அவர் வந்து உள்துறையில் உள்ள சில அதிகாரிகளை சந்தித்து பேசியதாக கூறுகிறார்கள். இதனை தொடர்ந்தே பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு உத்தரவு வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பேரறிவாளன் பரோல் முடிந்து மறுபடியும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டதால் மறுபடியும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பேரறிவாளன். அவரை விடுதலை செய்ய வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னை சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்தோடு முதல்கட்டமாக அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று சிறைத்துறை பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.

ஆனால் பேரறிவாளன் உடல் நிலை சரியில்லை என்பதால்அவருக்கு பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் மறுபடியும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்த கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருந்தது சிறைத்துறை. இந்த நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு மாத கால பரோல் முடிந்த நிலையில் பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியில் திடீரென பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு தொடர்பான உத்தரவு வந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து பேரறிவாளனை புழலுக்கு கொண்டு செல்லாமல் வேலூரில் உள்ள அவரது வீட்டிற்கே போலீசார் அழைத்துச் சென்று விட்டனர். மேலும் பேரறிவாளனுக்கு பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டித்திருப்பதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பரோல் முடிய ஒரு வாரம் இருப்பது முதலே அற்புதம்மாள் தனது மகன் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசியபடியே இருந்தார். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்காமலேயே இருந்தது. இந்த நிலையில் பரோல் முடிந்த பிறகும் அற்புதம்மாள் தன் மகன் பரோல் நீட்டிப்பு கேட்டு வழங்கிய மனு நிலுவையில் உள்ளதை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அப்படியும் கூட பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். அதற்குள் பரோல் முடிந்துவிட பேரறிவாளனும் சிறைக்கு புறப்பட்டுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென திமுக மகளிர் அணிச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் வந்திருந்தார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் தலைமச் செயலகம் வருகை தந்தார். அவர் வந்து உள்துறையில் உள்ள சில அதிகாரிகளை சந்தித்து பேசியதாக கூறுகிறார்கள். இதனை தொடர்ந்தே பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு உத்தரவு வெளியிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

click me!