கோட்டைக்கு வந்த ப.சிதம்பரம்..! மு.க.ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு..! நடந்தது என்ன?

Published : Jun 29, 2021, 11:44 AM IST
கோட்டைக்கு வந்த ப.சிதம்பரம்..! மு.க.ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு..! நடந்தது என்ன?

சுருக்கம்

ப.சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை மறுபடியும் வலியுறுத்துவது தொடர்பாக பேசியதாக சொல்லப்படுகிறது. அதோடு காங்கிரசுக்கு கட்டாயம் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வேண்டும் என்று சோனியா எதிர்பார்ப்பது குறித்தும் ஸ்டாலினிடம் சிதம்பரம் பேசியதாக கூறுகிறார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சென்னை தலைமைச் செயலகம் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தார் ப.சிதம்பரம். வீடு தேடி வந்தவரை வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார் ஸ்டாலின். அப்போது அந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டது. ஆனால் சுமார் 20 நிமிடங்கள் நீடித்த சந்திப்பின் போது தமிழக நிதி நிலையை சமாளிக்க சில பல யோசனைகளையும் ப.சிதம்பரம் கூறிவிட்டு வந்திருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகம் சென்று சந்தித்துள்ளார் ப.சிதம்பரம்.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ப.சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ப.சிதம்பரம் திடீரென மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்கிறார்கள். தமிழகத்தில் 3 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல்  அறிவிக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் இந்த மூன்று பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் இரண்டை திமுகவும் ஒன்றை அதிமுகவும் கைப்பற்றும். அதே சமயம் மூன்று பதவிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் என்றால் மூன்றுமே திமுக வசமாகும்.

கடந்த காலங்களில் குஜராத்தில் காலியாக இருந்த ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு தேர்தல் ஆணையம் தனித்தனியாக தேர்தல் நடத்தியது. அதனை சுட்டிக்காட்டி தமிழகத்திலும் மூன்று எம்பி பதவிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துமாறு திமுக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் ப.சிதம்பரம் முதலமைச்சரை சந்தித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் காலியாக உள்ள எம்பி பதவிகளில் ஒன்றை காங்கிரஸ் கட்சி விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுகவோ மூன்றுக்கும் தனித்தனியாக தேர்தல் நடைபெற்றால் ஒன்றை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்கலாம் என்று கருதுகிறது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை மறுபடியும் வலியுறுத்துவது தொடர்பாக பேசியதாக சொல்லப்படுகிறது. அதோடு காங்கிரசுக்கு கட்டாயம் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வேண்டும் என்று சோனியா எதிர்பார்ப்பது குறித்தும் ஸ்டாலினிடம் சிதம்பரம் பேசியதாக கூறுகிறார்கள். இதனிடையே ப.சிதம்பரம் தற்போது தூது வந்திருப்பது குலாம் நபி ஆசாத்திற்காக என்றும் சொல்கிறார்கள். மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவருக்கு மறுபடியும் அந்த பதவியை பெற்றுக் கொடுக்க ப.சிதம்பரம் விரும்புவதாகவும், அதனால் தான் அவர் நேரில் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகவும் கூறுகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை