நல்லா கேட்டுக்குங்க… உதயநிதி அமைச்சர் ஆகணுங்கிறது மக்கள் விருப்பம்..! அடித்து ஆடும் அன்பில் மகேஷ்

By manimegalai aFirst Published Dec 1, 2021, 7:36 PM IST
Highlights

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வரவேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல, சேப்பாக்கம் தொகுதி மக்களின் விருப்பம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி இருக்கிறார்.

 

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வரவேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல, சேப்பாக்கம் தொகுதி மக்களின் விருப்பம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி இருக்கிறார்.

வாரிசு அரசியலுக்கும், திமுகவுக்கும் இருக்கும் ஜோடி பொருத்தம் தமிழக வாக்காளர்கள் அறியாதது அல்ல. அமைச்சர்கள் முதல் சாதாரண கவுன்சிலர் வரை பார்த்தோம் என்றால் வாரிசுகள் லைன் கட்டி வருவது பற்றிய பேச்சுகள் பலமுறை பொது வெளியில் வருவது உண்டு.

திமுகவின் நேரடியாக கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போட்டு தாக்கும் அதிமுக கூட எப்போதும் முன் வைக்கும் முக்கிய விஷயம் வாரிசு அரசியல். ஒவ்வொரு முறையும் வாரிசு அரசியல் என்ற முழக்கம் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் போதும் அதற்கு கர்மசிரத்தையாக விளக்கம் அளித்துவிட்டு நகர்ந்துவிடுகின்றனர் உடன்பிறப்புகள்.

ஆனாலும் விடாக்கொண்டான் கதையாக திமுகவை எதிர்க்கும் கட்சிகள் வாரிசு அரசியல் என்ற வாதத்தை வைத்து வம்பளந்து கொண்டிருக்கின்றன. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்ற போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டப்பட்ட கா……லம் மலையேறி போய் இப்போது எங்கு பார்த்தாலும் ஸ்டாலின், உதயநிதி பெயர்கள் தாங்கிய பேனர்கள் வலம் வருகின்றன.

நாடாளுமன்றம் வரை உதயநிதியின் பெயர் வாழ்க.. வெல்க என்று முழங்க… அதற்கு வெங்கய்யா நாயுடு கூறிய பதில் இன்னமும் இணையத்தில் கொத்து பரோட்டாவாக்கி திமுகவை பலரும் கொத்தி எடுத்து வருகின்றனர்.

ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி என்ற பிம்பம் திமுகவில் கட்டமைக்கப்படுகிறது என்ற விமர்சனம் நிஜம்தானோ என்று எண்ணம் உடன்பிறப்புகள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருக்கும் ஒரு கருத்தை உ.பிக்களே உற்று பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் இப்போது திமுக எம்எல்ஏ, இளைஞர் அணியின் மாநில செயலாளராக இருக்கிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் ஆகியோர் வழங்கினர்.

அப்போது அன்பில் மகேஷ் பேசியதாவது: கடந்த கால அதிமுக ஆட்சியில் தொகுதி எம்எல்ஏ மக்களை சந்திக்கவே வந்தது இல்லை. இப்போது அமைச்சர்களுக்கு எல்லாம் ரோல் மாடலாக இருப்பவர் பி.கே. சேகர்பாபு.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணியை மட்டும் தொகுதி என்ற அடிப்படையில் சொந்தம் கொண்டாடாமல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் அவர் சொந்தம் கொண்டாட வேண்டும். அப்படிப்பட்ட பொறுப்புக்கு அவர் வர வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக வலம் வர வேண்டும். நான் எனது விருப்பத்தை மட்டும் கூறவில்லை. மக்களின் விருப்பத்தையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். மக்களுக்காகவே உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதிக்குள் சுருங்கிவிடக் கூடாது என்று பேசி இருக்கிறார்.

அன்பில் மகேஷ் பேசிவிட்டு செல்ல… உ.பி.க்கள் அவரது பேச்சை கெட்டியாக பிடித்துக் கொள்வர் என்றும், இது போன்ற உயர்த்தி பிடித்தல் பேச்சுகள் இனி திமுகவில் அதிகமாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அன்பில் கருத்துக்கு எதிர்க்கருத்து இல்லாமல் இல்லை.

கருணாநிதி காலத்தில் அவர் என்ன நினைக்கிறார் அல்லது என்ன சொல்ல வேண்டும் என்பதை பேராசிரியர் அன்பழகன் வாயிலாக சொல்ல வைத்து அதை நூல் பிடித்த மாதிரி கொண்டு சென்று கட்சியின் விருப்பம் என்று அனைவரையும் வாயடைப்பார். அன்று கருணாநிதிக்கு அன்பழகன்… இப்போது ஸ்டாலினுக்கு அன்பில் மகேஷ்… மற்றபடி இதில் என்ன புதுசு இருக்கிறது என்று உதட்டை பிதுக்குகின்றனர் திமுகவை நன்கறிந்தவர்கள்….!!

click me!