அட கடவுளே.. இந்தாண்டு புயல், மழை வெள்ளத்தில் இத்தனை உயிர்கள் பலியா.?? மத்திய அரசு வெளியிட்ட பகீர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Dec 1, 2021, 6:56 PM IST
Highlights

ஆனால் மக்களவையில் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள தகவலில் தமிழ்நாட்டில் 54 பேர் மட்டுமே இந்த ஆண்டு பேரிடரில் உயிரிழந்ததாக குறைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை முழுமையாக கணக்கிட்டால் 2002 என்கிற எண்ணிக்கைவிட மேலும் உயரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

புயல் மழை வெள்ளம் என நடப்பாண்டில் மட்டும் நாட்டில் பேரிடர்களால் 2002 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 53,228  கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

மழை வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும், சேதங்களும் கணக்கிட முடியாத அளவிற்கு இருந்து வருகிறது.  மனித சமூகமும் சுற்றுச்சூழலை பாழ் படுத்தியதன் விளைவே இயற்கை சீற்றங்களுக்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது. புவி வெப்பமயமாதல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, காற்று மாசு, காடுகள் அழிப்பு போன்றவற்றால் இயற்கையில் ஏற்பட்ட சமச்சீரற்ற நிலையின் காரணமாக இயற்கையில் ஏற்படும் அதீத எதிர்விளைவுகளே இயற்கை சீற்றங்காக வெடிக்கிறது. குறிப்பாக மழை புயல் போன்றவை இயல்பை விட அதிகமாக இருந்து வருவதை நாம் காணமுடிகிறது. 

பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை எப்போதும் இல்லாத அளவுக்கு கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாத த்தில் மட்டும் சென்னை 3 முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக தலைநகர் சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக் காடாக மாறியது. முக்கிய நீர் ஆதாரங்கள் வேகமாக நிரம்பின. ஒரு சில மணி நேர மழைக்கை வெள்ளக்காடாக சென்னை மாறியது. சில நேரங்களில் மேக வெடிப்பு மேகங்கள் மழையாக கொட்டி தீர்த்ததை காண முடிந்தது. இதனால் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாயினர், கடந்த மாதம் மட்டும் 1000 மில்லி மீட்டர் மழை பதிவானது.  கடந்த 200 ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஒரே மாதத்தில் 1,000 மில்லி மீட்டர் பதிவானது, இது நான்காவது முறை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நிலைமை இப்படி இருந்து வரும் நிலையில், புயல், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் மட்டும் நாடு முழுவதும் நடப்பாண்டில் 2002 பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சகம், நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2002 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 53.228  கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும், 7,80,058  குடியிருப்புகளும் 50.40 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் மழைவெள்ளம் இடி, மின்னல், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் 2019ஆம் ஆண்டு 1562 பேரும், 2020 ஆம் ஆண்டில் 1444 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒருமாதம் மீதமிருக்கும் நிலையில், பேரிடர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 105 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் மக்களவையில் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள தகவலில் தமிழ்நாட்டில் 54 பேர் மட்டுமே இந்த ஆண்டு பேரிடரில் உயிரிழந்ததாக  குறைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை முழுமையாக கணக்கிட்டால் 2002 என்கிற எண்ணிக்கைவிட மேலும் உயரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!