திமுக ஏமாற்றிடும்ணு மக்கள் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க.. வாக்குறுதியை நிறைவேற்றுங்க.. ஜி.கே.வாசன் அட்வைஸ்!

By Asianet TamilFirst Published Sep 6, 2021, 9:08 PM IST
Highlights

திமுக அரசு ஏமாற்றத்தைக் கொடுத்து விடுமோ என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 
 

தூத்துக்குடியில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். இதேபோல இங்கிருந்து சரக்கு ஏற்றுமதி- இறக்குமதி மேலும் உயரக்கூடிய வகையில் விமான நிலையத்தையும் விரிவாக்கம் செய்ய வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார். அதை தமாகா முழுமனதோடு வரவேற்கிறது.
கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழக அரசு மிகுந்த முன் ஜாக்கிரதையோடு இதை கையாள வேண்டும். அனைவருக்கும் கொரோனா பரவாத வகையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். இத்தேர்தலில் தமாகா வெற்றி பெறக்கூடிய இடங்களைத் தேர்வு செய்து, அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைக் கேட்டுப் பெறுவோம்.


திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதுதான் மக்களின் ஒரே எண்ணம். தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். அதை நம்பியே மக்களும் வாக்களித்தார்கள். ஆனால், திமுக அரசு ஏமாற்றத்தைக் கொடுத்து விடுமோ என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், நகைக் கடன் தள்ளுபடி, பயிர்க் கடன் தள்ளுபடி, மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கீடு போன்ற அறிவிப்புகள் கிடப்பில் கிடக்கின்றன என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. எனவே, இவற்றை நிறைவேற்ற அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

click me!