தொடக்கத்திலேயே மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். திமுக அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டில் இருந்தாலும்கூட விலகி இருந்தால்தான் நல்லது எனச் சுகாதாரத்துறை கூறியுள்ளது. மதுரைக்காரன் என்ற அடிப்படையில் அன்போடு பாசத்தோடு நான் கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு எல்லா தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது.
பயில்வானாக இருந்தாலும் சரி; நோஞ்சானாக இருந்தாலும் சரி எல்லோரையும் கொரோனா பாதித்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை இன்று மக்கள் பாராட்டுகிறார்கள். நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் ரத்தினம் போல் உள்ளது. ஆனால், திமுக அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசை குறை சொல்லிவிட்டு மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள்.
தொடக்கத்திலேயே மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். திமுக அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் படுக்கைகள் இல்லை; ஆக்சிஜன் இல்லை எனப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஆட்சியில் எல்லாமே இல்லை இல்லை இல்லை என்றுதான் உள்ளது. திமுக அரசின் நடவடிக்கைகள் இந்த நேரத்தில் மெத்தனமாகவே உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இன்று முதல்வராக உள்ள ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அடுத்து ஊரடங்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனப் பேசினார். இந்த ஆட்சியில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது எதிர்காலத்தை நினைத்து பொதுமக்கள் பயப்படுகிறார்கள். அரசு நிர்வாகம் துரித நடவடிக்கையை மேற்கொண்டு மக்களை காப்பற்ற வேண்டும். மதுரைக்காரன் வீரமானவன், விவேகமானவன். என்றாலும் கொரோனா அத்தனையையும் சுருட்டுகிறது. மக்களுக்கு அரசும் மதுரை மாநகராட்சியும் உதவ வேண்டும்” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.