
குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியாதவருக்கு தொகுதி பக்கம் என்ன வேலை என நிலக்கோட்டை தனி தொகுதி எம்.எல்.ஏ தங்கதுரையை அப்பகுதி மக்கள் ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தங்கதுரை. இவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார். இதற்கு அந்த தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மேலும் ஜெயலலிதாவிற்கே நாங்கள் ஓட்டு போட்டோம் எனவும், எங்கள் விருப்பத்திற்கு மாறாக சசிகலாவிற்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியான பெருமாள் கோவில் பட்டியில், குடிநீர் விநியோகம் முறையாக வழங்குவதில்லை என கூறி வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அங்கு வந்த நிலக்கோட்டை தனி தொகுதி எம்.எல்.ஏ தங்கதுரை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சனையை தான் தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்தார்.
இதைகேட்ட பொதுமக்கள் கடும் கோபமடைந்தனர். நீங்கள் யார் எங்களிடம் கேட்பதற்கு, நாங்கள் அதிகாரிகளிடம் பேசி கொள்கிறோம், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என எகிறினர்.
மேலும் எங்கள் ஊரு பக்கம் வந்து பாருங்க... எங்கள் பலத்தை காட்டுகிறோம் என கோபத்தில் கொந்தளித்தனர்.
பீதியில் ஆழ்ந்து போன எம்.எல்.ஏ தங்கதுரை ஆளைவிடுங்கடா சாமினு தலைதெறிக்க ஓடிவிட்டார்.