
தமிழக கவர்னராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கூட்டம், ஆலோசனைக்கூட்டம், கள ஆய்வு என்று கலக்கி எடுப்பதை ஆளும் அ.தி.மு.க. கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் எகிறி எகிறி குதிக்கின்றன.
‘மாநில சுயாட்சி தத்துவத்தை அவமதிக்கும் வகையில் கவர்னர் செயல்படுகிறார்’ என்று ஸ்டாலின் குய்யோ முறையோ என சவுண்டு விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவரான ப.சிதம்பரமும் கவர்னரின் முயற்சியை விமர்சித்து தள்ளியிருக்கிறார்.
ஆனால் ஸ்டாலினை விட மிக அதிகமான பாய்ச்சலை சிதம்பரம் காட்டியிருப்பதுதான் ஹைலைட்டே!
“கவர்னர் புரோஹித் தனது வரம்புகளை மீறி செயல்படுகிறார். அவரது அறிக்கை வியப்பளிக்கிறது. கவர்னர் என்பவர் பெயரளவுக்கே நிர்வாகத்தின் தலைவரே தவிர உண்மையான தலைவர் கிடையாது.
ஆனால் தமிழக அரசாங்கத்தின் உண்மையான தலைவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ மத்திய அரசின் மீது கொண்டிருக்கும் பயத்தின் காரணமாக அமைதியாக இருப்பதால், கவர்னர் புரோஹித் தனது அதிகார வரம்புகளை மீறி செயல்படுகிறார்.
ஆய்வுக்கூட்டங்களுக்கு கவர்னர் அழைத்தால் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தினருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரை வழங்கிட வேண்டும்.” என்று சீறியிருக்கிறார் சிதம்பரம்.
சிதம்பரத்தின் இந்த பாய்ச்சல் பி.ஜே.பி.யினரை சிரிக்க வைத்திருக்கிறது. கவர்னரின் வார்த்தைகளை புறக்கணிக்க சொல்லும் தைரியம் தமிழக முதல்வருக்கோ, துணை முதல்வருக்கோ அல்லது அமைச்சர் பெருமக்களுக்கோ உண்டா? எங்கே சிதம்பரம் சொல்லியது போல் ஒரு வார்த்தையை அவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம்! என்கிறார்கள்.
இந்த அவமானம் தமிழக அமைச்சரவைக்கு தேவைதானா? என்பதே தமிழனின் கேள்வி.