
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடந்துவரும் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி தனது வெற்றிக் கணக்கை தொடங்கி கசும்பதி தொகுதையை கைப்பற்றியது.
முதல்வர் வீரபத்ர சிங் தனது அர்கி தொகுதியில் 3,500 வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த 1990ம் ஆண்டில்இருந்து பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி மாறி, மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. இந்நிலையில், 68 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 9ந்தேதி தேர்தல் நடந்தது.
இதில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின, 337 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 39 நாட்களுக்கு பின் இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது வரை பா.ஜனதா கட்சி 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதற்கிடையே, கசும்பதி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா கட்சியின் வேட்பாளர் விஜய் ஜோதியை 9 ஆயிரத்து 200வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சிங் தோற்கடித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி முதல் வெற்றியை ருசித்துள்ளது.
சோலன் மாவட்டத்தில் உள்ள அர்கி தொகுதியில் முதல்வர் வீரபத்தர சிங் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவர் 3,500 வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார்.
முதல்வர் வீரபத்ர சிங் மகன் விஜய் விக்ரமாதித்யா சிம்லா தொகுதியில் போட்யிட்டார் அவரும் முன்னிலை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அதேசமயம், முன்னாள் முதல்வரும், பா.ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளருமான பிரேம் குமார் துமால், சுஜான்பூரில் போட்டியிட்டார். இவர் 1000 வாக்குகள் பின்னடைவுடன் இருந்து வருகிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.