
அதிமுகவுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார் என்றும் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை அமைச்சர்கள் யாரும் வாய்த்திறக்காமல் மவுனம் காத்து வந்தனர். சட்ட சபையில் கூட அனைத்து தரப்பு கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதில் கூறாமால் முதலமைச்சர் ஜெயலலிதாவே பதில் அளித்து விடுவார்.
அந்த அளவிற்கு அமைச்சரகளை மவுனம் காக்க வைத்து கட்டி காத்து வந்தார் ஜெயலலிதா. ஆனால் தற்போது முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
அதனால் அமைச்சர்கள் தங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் கொட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு சப்பை கட்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆளும் அதிமுக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தாலும் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டே மக்கள் மத்தியில் ஓங்கி நிற்கிறது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், பெரியகுளத்தில் நடக்கும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இரட்டை இலை யாருக்கு கிடைக்கிறதோ அதுதான் உண்மையான அதிமுக என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
மேலும், அதிமுக-வுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார் என்றும் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.