ஈயம் பூசன மாதிரியும் இருக்கணும்... பூசாத மாதிரியும் இருக்கணும்... முத்தலாக் தடை சட்டத்தில் கட்சிகளின் பல்டி!

By Asianet TamilFirst Published Jul 31, 2019, 6:20 AM IST
Highlights

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவிட்டு, குரல் வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததுபோல, பீஹாரில் பாஜக கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை வெளிநடப்பு செய்தது. 

மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா வெற்றி பெற வசதியாக பாஜக கூட்டணி கட்சிகளான அதிமுகவும் ஐக்கிய ஜனதாதளமும் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதை அடுத்து, மாநிலங்களவையில் அந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை அதிமுகவின் ஒரே எம்.பி.யான துணை முதல்வர் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமார் ஆதரித்தது முத்தலாக் தடை சட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை எழுப்பியது. கடந்த டிசம்பரில் இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டபோது இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், இப்போது ரவீந்திரநாத் குமார் ஆதரித்ததால், சலசலப்பு ஏற்பட்டது.

 
இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுகவின் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,  நவநீதகிருஷ்ணன் ஆகிய எம்.பி.க்கள் இந்த மசோதாவை அலுவல் ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்தினர். இதேபோல பல்வேறு கட்சிகளும் ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப குரல் கொடுத்தனர். மக்களவையில் இந்த மசோதாவை ஆதரித்த அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் 11 எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். குரல் வாக்கெடுப்பில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 99, எதிராக 84 வாக்குகள் பதிவாயின. இதனால், இந்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவிட்டு, குரல் வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததுபோல, பீஹாரில் பாஜக கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை வெளிநடப்பு செய்தது. தேசியவாத காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அவைக்கே வரவில்லை. 
இந்தக் கட்சிகள் முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராகப் பேசிவந்தன. இக்கட்சிகள் சபையில் பங்கேற்று எதிர்த்து வாக்களித்திருந்தால், மசோதா தோல்வி அடைந்திருக்கும். இதை குறிப்பிடும் வகையில்தான், இதுபற்றி கனிமொழி எம்.பி. ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அதிமுகவை மட்டும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.  “முத்தலாக் தடை மசோதா வெற்றி பெற வசதியாக அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது” எனத் தெரிவித்திருந்தார்.

click me!