நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு....12 மசோதாக்கள் நிறைவேற்றம்; 61 மணி நேரம் நடந்தது

First Published Jan 5, 2018, 10:46 PM IST
Highlights
parliment session postponed

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத் தொடரில் முத்தலாக் தடை சட்ட மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசிநாளான நேற்று மக்களவையின் சபாநாயகர் சுமித்ரா மகாஜான் அறிவிப்பு வெளியிட்டார். அவர் கூறியதாவது-

61 மணிநேரம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி, ஜனவரி 5-ந்தேதி வரை நடந்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் 13 நாட்கள் , அதாவது 61 மணி நேரம் 48 நிமிடங்கள் அவை நடந்துள்ளது.

16 மசோதாக்கள்

இந்த கூட்டத்தொடரில் அரசு சார்பில் 16 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, 12 மசோதாக்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக முத்தலாக் தடை சட்ட மசோதா, மத்திய சாலை நிதி மசோதா, தலைநகர் டெல்லி சட்ட மசோதா, சரக்கு மற்றும் சேவை மசோதா திருத்த மசோதா, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊதிய உயர்வு குறித்த மசோதா, உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

14 மணி நேரம் பாதிப்பு

இந்த கூட்டத் தொடரில் அவையில் நடந்த கூச்சல், குழப்பங்கள், அமளியால் 14 மணிநேரம் 51 நிமிடங்கள் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இதில் 8மணி நேரம் 10 நிமிடங்கள் பல்வேறு முக்கிய விஷயங்களுக்காக அதிக நேரம் செலவு செய்யப்பட்டுள்ளது.

280 கேள்விகள்

இந்த தொடரில் குரல்வழி பதில் கூறும் 280 கேள்விகள் கேட்கப்பட்டதில், அதில் 45 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டன.  மற்ற கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்து 220 கேள்விகள் அவையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

சபையில் உள்ள உறுப்பினர்கள் மூலம் மக்களின் அவசர நலன் சார்ந்த 198 விஷயங்கள் எழுப்பப்பட்டன, 377 விதியின் கீழ் 226 விஷயங்கள் எழுப்பப்பட்டன. இந்த தொடரில் நிலைக்குழுக்கள் 41 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஓகிபுயல்

பல்வேறு மாநிலங்களை ருத்ரதாண்டவமாடி, உயிர்பலி வாங்கிய ஓகி புயல் குறித்து 193 விதியின் கீழ் விவாதிக்கப்பட்டு, அதற்கு உள்துறை அமைச்சர் பதில் அளித்தார்.

இந்த தொடரில் மொத்தம் 2ஆயிரத்து 255 ஆவணங்கள் அமைச்சர்கள் தங்கள் துறைரீதியாக தாக்கல் செய்தனர். தனிநபர் மசோதாக்கள் 98 தாக்கல் செய்யப்பட்டன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒத்திவைப்பு

 குளிர்காலக் கூட்டத்தொடர் முடிந்தது, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவிப்பு வௌியிடும்போது, பிரதமர் மோடி அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!