9 தொகுதிகள்! பியூஸ் கோயலை அதிர வைத்த பிரேமலதா விஜயகாந்த்..!

By Selva KathirFirst Published Feb 20, 2019, 10:03 AM IST
Highlights

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணைய வேண்டும் என்றால் 9 தொகுதிகள் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று பிரேமலதா திட்டவட்டமாக பியூஸ் கோயலிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணைய வேண்டும் என்றால் 9 தொகுதிகள் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று பிரேமலதா திட்டவட்டமாக பியூஸ் கோயலிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெகா கூட்டணி கனவோடு தமிழகத்தில் வலம் வரும் பா.ஜ.க முடிந்த அளவிற்கு தமிழகத்தில் கூடுதல் இடங்களை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளது. இதனால் தான் தங்களுக்கு 5 தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை பாமக கூட்டணிக்கு வர வேண்டும் என்று விட்டுக் கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் பா.ம.கவை போல் தே.மு.தி.கவை கூட்டணிக்குள் கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை.

எப்போதுமே தே.மு.தி.க கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை வெளிப்படையாக வைத்துக் கொள்ளாது. தங்களுக்கான நோக்கங்கள் நிறைவேறும் வரை ரகசியமாகவே இருக்க விரும்புவார்கள். அந்த வகையில் பா.ம.க., பா.ஜ.க கூட்டணியை உறுதிப்படுத்தினாலும் கூட கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதை கூட வெளியிடாமல் அமைதி காக்கிறது தே.மு.தி.க தரப்பு. 

அ.தி.மு.க கூட்டணிக்கு முதல் பிரிபரன்ஸ் என்றும் திரைமறைவு பேச்சுவார்த்தையில் சுதீசும், பிரேமலதாவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். துவக்கத்தில் 11 தொகுதிகள் என்று ஆரம்பித்த தே.மு.தி.க தற்போது பா.ம.கவிற்கு 7 தொகுதிகள் என்றதும் 9 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளதாக கூறுகிறார்கள். பா.ம.கவிற்கே 7 தொகுதிகள் என்றால் அவர்களை விட எங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என்பது தான் பிரேமலதாவின் பிடிவாதத்திற்கு காரணம். வட மாவட்டங்களில் மட்டுமே வாக்கு வங்கி உள்ள பா.ம.கவிற்கு ஏழு தொகுதிகள் என்றால் தங்களுக்கு ஒன்பது தொகுதிகள் வேண்டும் என்று பிரேமலதா பிடிவாதம் பிடித்த காரணத்தினால் தான் நேற்று கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு தே.மு.தி.க தரப்பில் இருந்து யாரும் செல்லவில்லை. 

இதனிடையே கூட்டணிக்கான கதவை சாத்திவிடக்கூடாது என்பதற்காக பியூஸ் கோயல் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு கூட்டணி குறித்து பியூஸ் கோயல் பேசியுள்ளார். அப்போது ஒன்பது தொகுதிகளுக்கு குறைவாக ஒரு தொகுதியை கூட வாங்கிக் கொள்ளமாட்டோம் என்று கூறி பியூஸ் கோயலையே அதிர வைத்துள்ளார் பிரேமலதா என்று சொல்கிறார்கள். மேலும் கடந்த முறை 14 தொகுதிகளில் போட்டியிட்ட தங்களுக்கு இந்த முறை அதில் பாதி கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி? என்று கேட்டுள்ளார். 

இதனால் தொடர்ந்து பேச முடியாமல் பியூஸ் கோயல் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்கள். ஒன்பது தொகுதி என்று பிரேமலதா உறுதியாக இருக்க காரணம் தி.மு.க கூட்டணிக்கான கதவு திறந்திருக்கிறது, பிளஸ் தினகரன், கமல் உள்ளிட்டோருடன் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான ஒரு வாய்ப்பு இருப்பதும் தான் என்கிறார்கள். எது எப்படியோ வழக்கம் போல் தே.மு.தி.க இந்த முறையும் கூட்டணி குட்டையை குழப்ப ஆரம்பித்துள்ளது.

click me!