பாமக தேர்தல் பட்ஜெட் 600 கோடியாம்..!! ஒரு முடிவோடு தான் குதிக்கிறார் டாக்டர்..!

By Vishnu PriyaFirst Published Mar 1, 2019, 12:31 PM IST
Highlights

வெயில்ல காஞ்சு கருகி முந்திரி தோப்புல வேலை பார்க்கிறவன், பா.ம.க.வுல தொண்டனாகவும் இருப்பான். அவன்கிட்ட போயி ஆயிரம் ரூபாய் கேட்க முடியுமா? தலைமை இதையெல்லாம் சிந்திக்கணும். இந்த திட்டம்  மிக அதிர்ச்சியை தருது.” என்கிறார்கள்.

வருடா வருடம் ஆங்கில புத்தாண்டு பிறந்த சில நாட்களில் ஆளுங்கட்சியாக யார் இருப்பவர்களை அதிர விடுவது டாக்டர் ராமதாஸின் வழக்கம். ‘நிழல் பட்ஜெட்’ எனும் பெயரில், தாங்களே தயாரித்த நிதி நிலை அறிக்கை ஒன்றை வெளியிடுவார் மனிதர். அதில், ஆளும் அரசு எதையெல்லாம் சுமையாக மக்கள் மீது திணித்துள்ளதோ அதையெல்லாம் சுட்டிக்காட்டி ‘இதை மக்கள் தலையில் ஏற்றாமல் தவிர்க்கலாம். 

இந்த இந்த வகைகளில் நடந்தால் பற்றாக்குறை இல்லாமல் லாப கணக்கில் கவர்மெண்டை ஓட்ட முடியும். நாங்கள் போடும் கணக்குப்படி லாபம் வருகிறது, ஆனால் உங்களுக்கு மட்டும் எப்படி நட்டம் வருகிறது? எதற்காக மக்களுக்கு அதிகமாய் வரி போடுகிறீர்கள்?’ என்று ஆதாரத்தோடு அடிச்சு தூக்குவார். இதைப் பார்க்கும்போதெல்லாம் ஆளுங்கட்சி மீது ‘நம்மள நல்லா ஏமாத்துறாங்கப்பா’ என்று ஆத்திரம் ஆத்திரமாய் வரும். அந்த சமயங்களில் மக்கள் இருக்கும் திசையை நோக்கி, ‘திராவிட கட்சிகளின் பித்தலாட்டத்தை பாருங்கள் மக்களே. வரி, வசூல், வேட்டை மற்றும் நட்டக்கணக்குதான் இவர்களின் அரசாங்கம். 

அரசியல் முதல் அரசு வரை மக்கள் மற்றும் தொண்டனின் பாக்கெட்டில் கைவைப்பதே இவர்களின் நிர்வாகம். இதனால்தான் சொல்கிறோம், ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்களேன்! என.’ என்று வெண்ணெய்யை கத்தியால் அறுப்பது போல் மிக அழகாக செருகுவார். அப்பேர்ப்பட்ட கொள்கைப் புலி பா.ம.க. இப்போது வவ்வால்  ஆகிவிட்டது! என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகளே. அதாவது தலைகீழாக மாறிவிட்டதாம் கட்சியின் கட்டுப்பாட்டு நிலைமை. அப்பாவும், மகனுமாக வறுவறுவென வறுத்தெடுத்த அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்ததில் இருந்தே கட்சிக்கு கட்டம் சரியில்லாமல் போனது.

இந்த சூழலில் உட்கட்சியின் நடைமுறைகளிலும் பகீர் திருப்பங்களை சந்திக்கிறதாம் பா.ம.க. அதாவது கட்சிக்குள்ளேயே நிதி வசூலை துவக்கிவிட்டதாம் தலைமை. இதை அக்கட்சி நிர்வாகிகள் சும்மா சொல்லவில்லை. பா.ம.க.வின் பொருளாளரான திலகபாமா கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பி வரும் வாட்ஸ் - அப் தகவலை அடிப்படையாக வைத்துத்தான் இந்த பரபரப்பு கிளம்பியுள்ளது. அதாவது...ஒவ்வொரு தலைமை நிர்வாகிகளில் ஆரம்பித்து கடைசி தொண்டர் வரை ஒவ்வொரு உறுப்பினரும்  தலா ஆயிரம் ரூபாயை கட்சி நிதியாக தர வேண்டும்! என்று தலைமை கட்டளையிட்டுள்ளது. 

திலகபாமா அனுப்பும் வாட்ஸ் அப் தகவலை, மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு கீழே உள்ள நிர்வாகிகள் மூலமாக தங்கள் மாவட்டத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது கடமையாம். ’ஊழல் கட்சி, வசூல் கட்சி’ என்று தங்களால் வறுக்கப்பட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததுமே இப்படியொரு தடாலடியில் பா.ம.க. தலைமை இறங்கியதை அக்கட்சியினரால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். உட்கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட விமர்சனங்கள் வெடித்திருக்கிறதாம். 

இதுபற்றி திலகபாமாவோ மிக கூலாக....”நாங்க என்ன  வெளியிலேயா வசூல் பண்றோம்? எங்க கட்சியை நடத்துறதுக்காக, சொந்த கட்சி ஆளுங்கட்ட கேட்கிறோம், அவ்வளவுதான். தேர்தல்னு வந்தால் செலவுகள் அதிகமிருக்குது இல்லையா, அதை சமாளிக்கத்தான் இது.நாங்க ஒண்ணும் முறைகேடாக வசூல் பண்ணலை. கனரா வங்கியில் அக்கவுண்ட் ஒன்றை துவங்கி அந்த எண்ணுக்குதான் ஒவ்வொருவரும் தலா ஆயிரம் ரூபாய் போட சொல்லியிருக்கோம். எங்கள் கட்சியில்  மொத்தம் அறுபது லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறாங்க. தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டால், அறுநூறு கோடி ஆச்சு. 

எங்கள் தேர்தல் சுமையை நாங்களே தாங்கிக்குறோம், வேற யார் பாக்கெட்டிலும் கை வைக்கலை. திரட்டப்படும் இந்த நிதிக்கான வரி, தணிக்கை கணக்கு எல்லாமே வெளிப்படையாகவும், சட்டப்பூர்வமாகவும் இருக்கும். இன்றைய தேதிக்கு ஒரு உறுப்பினருக்கு ஆயிரம் ரூபாய்ங்கிறது மிகப்பெரிய தொகையெல்லாம் இல்லை. மாச செலவுகளில் ஒரு பகுதிதான் அவ்வளவே.” என்கிறார். அதேவேளையில் நிர்வாகிகளோ...”காசு இருக்கிறவங்களுக்கு ஆயிரம் ரூபாய் பெருசு இல்லைங்க. ஆனால் அரியலூர், பெரம்பலூர், கடலூரின் உள் கிராமங்களில் வந்து பாருங்க, சோத்துக்கு வழியில்லாமல் வன்னியர் குடும்பங்கள் எத்தனை பேர் கெடக்குறாங்கன்னு. 

வெயில்ல காஞ்சு கருகி முந்திரி தோப்புல வேலை பார்க்கிறவன், பா.ம.க.வுல தொண்டனாகவும் இருப்பான். அவன்கிட்ட போயி ஆயிரம் ரூபாய் கேட்க முடியுமா? தலைமை இதையெல்லாம் சிந்திக்கணும். இந்த திட்டம்  மிக அதிர்ச்சியை தருது.” என்கிறார்கள். சரிதான்! ஆமா, டாக்டரும் சின்ன டாக்டரும் தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டுட்டாங்களா?

click me!