எடப்பாடியா... டிடிவி தினகரனா? நெருக்கடியில் தமாகா வாசன்...!

By Asianet TamilFirst Published Jan 10, 2019, 11:38 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசிவரை கூட்டணியை இறுதி செய்யாமல் விட்டதுபோல நாடளுமன்றத் தேர்தலிலும் செய்துவிட வேண்டாம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திவருகிறார்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசிவரை கூட்டணியை இறுதி செய்யாமல் விட்டதுபோல நாடளுமன்றத் தேர்தலிலும் செய்துவிட வேண்டாம் என தாமகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திவருகிறார்கள்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்தது தமாகா. திமுக கூட்டணியில் வாசன் சேர காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், அந்தக் கூட்டணியில் வாசன் இடம் பெறமுடியவில்லை. இன்னொரு புறம் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதற்காக அந்தக் கட்சி  நீண்ட நாட்கள் காத்திருந்தது. கடைசியில் அதிமுக கூட்டணியிலும் இடம் கிடைக்காமல் போகவே, வேறு வழியில்லாமல் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது. 

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மீண்டும் அதுபோன்ற சூழ்நிலைதான் வாசனை நெருக்கிவருகிறது. எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது என அந்தக் கட்சி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. முன்னாள் மக்கள் நலக் கூட்டணி திமுகவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தமாகா மட்டும் தனித்திருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு குறைந்த இடங்களை ஒதுக்கினால், வாசனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு கூடுதல் இடங்களைக் கேட்கும் திட்டம் காங்கிரஸ் கட்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கீட்டில் நெருக்கடி வந்தால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார்கள் காங்கிரஸார். இந்த உறுதியற்ற திட்டத்துக்காக வாசன் காத்திருக்கக்கூடாது என்று தமாகா நிர்வாகிகள் வலியுறுத்திவருகிறார்கள். அதிமுக பிளவுக்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணியை வாசன் ஆதரித்தார். அந்த அடிப்படையில் மீண்டும் அதிமுக கூட்டணியில் சேரலாம் என்றும் வாசனிடம் சில கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். 

ஆனால், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதால் வாசன் தயங்கிவருகிறார். இருந்தாலும் அதிமுகவோடு தொடர்பில்தான் வாசன் இருக்கிறார் என்று தாமகாவினர் கூறுகிறார்கள். அமமுகவோடு கூட்டணி சேரும் திட்டத்தையும் சிலர் வாசனிடம் வைத்திருக்கிறார்கள். அமமுகவும் வாசன் கூட்டணிக்கு வருவதை விரும்புகிறது. முன்னாள் காங்கிரஸ் காரர்களான வேலூர் ஞானசேகரன், சாருபாலா, தொட்டியம் ராஜசேகரன் போன்றவர்கள்  தற்போது தினகரனின் அமமுகவில் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் தமாகா நிர்வாகிகளிடம் பேசிவருவதாகவும் சொல்கிறார்கள். 

மூன்று கூட்டணியிலும் திரைமறைவில் தொடர்புகள் நீடிப்பதால், சட்டப்பேரவைத் தேர்தலைபோலவே கூட்டணியை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்படுமோ என்று தமாகாவினர் அஞ்சுகிறார்கள். ஜனவரிக்குப் பிறகாவது ஏதோ ஒரு கூட்டணியை இறுதி செய்து, வெற்றி வாய்ப்பு தொகுதிகளைப் பெற வேண்டும் என தாமகாவினர் வாசனிடம் வலியுறுத்திவருகிறார்கள்.

click me!