
எனது வாழ்க்கையில் என்னை மிகவும் கவர்ந்த நபர்களில் ஒருவர் எனது பள்ளித் தோழன் பன்னீர்செல்வம் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதன்கான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த என் நண்பன்தான் எனது கையில் முதன்முதலில் வாட்ச் கட்டியவர் என்றும் ராமதாஸ் உருக்கமாக தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் மூலம் அரசியலுக்கு வந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வன்னியர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி வன்னிய சாதி சங்கத்தினரால் 1987-ல் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த சங்கம்தான் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ராமதாசின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் மூலமாக ராமதாஸ் தமிழகத்தில் அனைவராலும் அறியப்படும் அரசியல் தலைவரானார். அன்று முதல் இன்று வரை பாமக நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார். இதுவரை திமுக- அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தனது தேவைகளை, கோரிக்கைகளை அவர் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தற்போது பாமகவின் தலைவராக பதவியேற்றுள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகவும் ராமதாஸ் இருந்து வருகிறார். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்று மூத்த தலைவர்களை நேர்காணல் கண்டு வருகிறது. அந்த வரிசையில் ராமதாசின் சிறு வயது முதல் அவரது அரசியல் எழுச்சி வரை அவரிடமே பேட்டி கண்டு பதிவு செய்து வருகிறது. அப்பேட்டியில் ராமதாஸ் தன்னைப்பற்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அதன் நெறியாளர் ராமதாசிடம் உங்களுடைய இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையில், உங்கள கவர்ந்தவர் யார், யாரை நீங்கள் முன்மாதிரியாக எடுத்து செயல்படுகிறீர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள, பாமக நிறுவனர் ராமதாஸ், உங்களிடம் ஏற்கனவே எனது பள்ளிப்பருவ வாழ்க்கைப் பற்றி கூறியிருக்கிறேன், நான் சென்னையில் படிக்கும்போது எனக்கு உற்ற துணையாக இருந்தவர் என் நண்பர் பன்னீர்செல்வம் தான். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர், ஓரளவுக்கு வசதியான குடும்பப் பின்னணியைக் கொண்டவர். நான் பல நேரங்களில் சாப்பிடாமல் இருப்பேன், அவர்தான் தன்னுடைய உணவை எனக்கும் பகிர்ந்து கொடுப்பார்.
அதேபோல நான் பள்ளிக்கு தாமதமாக வந்து கொண்டிருந்ததால், நண்பர் பன்னீர்செல்வம் ஒருநாள் என் கையை நீட்டச் சொன்னார், அப்போது நான் தயக்கத்துடன் நீட்டினேன், அப்போது என் கையில் ஒரு வாட்ச் கட்டினார், நான் நெகிழ்ந்து போனேன், முதல் முதலில் அப்போதுதான் நான் வாட்ச் கட்டினேன். அவர்தான் எனக்கு மிகவும் பிடித்தவர் என்பேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.