எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவனுடையது! எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண்டர் ஆனது எப்படி? பரபர பின்னணி..!

By Selva KathirFirst Published Oct 6, 2020, 10:10 AM IST
Highlights

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் கிட்டத்தட்ட அதிமுகவையே எடப்பாடியாரிடம் ஓபிஎஸ் ஒப்படைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் கிட்டத்தட்ட அதிமுகவையே எடப்பாடியாரிடம் ஓபிஎஸ் ஒப்படைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கடந்த பத்து நாட்களாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் நடத்திய ஆலோசனையின் மூலம் அவருக்கு ஒன்று நன்றாக தெரிந்தது. சசிகலாவிக்கு எதிராக தான் களம் இறங்கிய போது தனக்கு கிடைத்த ஆதரவு இந்த முறை இல்லை என்பது தான். அதிகபட்சமாக ஒரு சில எம்எல்ஏக்கள், ஒன்றியச் செயலாளர்களை தவிர வேறு யாரும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக எடப்பாடியை எதிர்க்க துணியவில்லை. ஓபிஎஸ் பெரிதாக நம்பிய தனது முக்குலத்தோர் லாபியும் அவரை கைவிட்டுவிட்டது.

எடப்பாடியாரை எதிர்த்தால் தோல்வி தான் என்பதை உணர்ந்து கொண்டே முதலமைச்சர் வேட்பாளராக அவரை ஏற்க ஓபிஎஸ் முடிவு செய்துவிட்டதாக கூறுகிறார்கள். கடந்த 28 ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின்பு முதலமைச்சர் வேட்பாளர் 7 ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வதை கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இதே போல் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளபட சில அமைச்சர்களும் முதலமைச்சரை சந்தித்தனர். இப்படி சந்திப்புகள் தொடர்ந்த நிலையில் ஓபிஎஸ் கடந்த வெள்ளிக்கிழமை தேனி புறப்பட்டு சென்றார். மேலும் அங்கும் தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஓபிஎஸ்சை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் நாள் நெருங்க நெருங்க அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ்சை சந்தித்த அமைச்சர்கள் பலரும், எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்றே வலியுறுத்தினர்.

இதற்கிடையே தான் அதிமுகவில் மீண்டும் இணைந்த போது அமைப்பதாக கூறிய 11 பேர் கொண்ட குழு என்ன ஆனது என்பதுதான் ஓபிஎஸ்சின் தொடர் கேள்வியாக இருந்தது. ஆனால் இந்த வழிகாட்டுதல் குழுவிற்கு பதில் தேர்தல் பிரச்சார குழு, தொகுதி பங்கீட்டு குழு, விளம்பர குழு என மூன்று குழுக்களை அமைக்கலாம் என ஓபிஎஸ்சிடம் எடப்பாடி தரப்பு கூறியதாக சொல்கிறார்கள். வேறு வழியே இல்லாமல் ஓபிஎஸ் இதனை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்கள்.

பகவத் கீதையை சுட்டிக்காட்டி எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று ஓபிஎஸ் செய்த ட்வீட் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தான் இறங்கிவந்துவிட்டேன் என்பதை உணரத்தான் என்கிறார்கள். பகவத் கீதையில் நான்கு வரிகளை கூறிய ஓபிஎஸ் அதன் பிறகு இருக்கும் வரியை குறிப்பிடவில்லை, அதில் எது இன்று உன்டையதோ அது நாளை மற்றொருவனுடையது என்கிற வரிக்கு ஏற்ப இந்த முடிவை ஓபிஎஸ் எடுத்தாகவும் கூறுகிறார்கள்.

இதைனிடையே  சென்னை தலைமைச் செயலகத்தில் 18 அமைச்சர்கள் எடப்பாடிய சந்தித்து பேசினர். மேலும் திட்டமிட்டப்படி 7 ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பயையும் இந்த அமைச்சர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.  பிற்பகலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கமும் சந்தித்து பேசினர். அப்போதும், கூட முதலமைச்சர் வேட்பாளர் திட்டமிட்டபடி அறிவிக்கப்பட வேண்டும் என்று எடப்பாடியார் உறுதியுடன் கூறியுள்ளார்.

அதற்கு கே.பி.முனுசாமி, வைத்திலிங்கத்தால் எதுவும் பதில் பேசமுடியவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் சமாதானமாக சென்றுவிடுவது என்று முடிவெடுத்தே தேனியில் இருந்து ஓபிஎஸ் சென்னை புறப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இப்படி அமைச்சர்கள் முதல் அதிமுக நிர்வாகிகள் வரை அனைவரையும் தன் பக்கம் இழுத்து ஓபிஎஸ்சை இந்த போட்டியில் வென்றுள்ளார் எடப்பாடியார்.

click me!