
பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் பழனிசாமி அணியுடன் பன்னீர்செல்வம் அணி இணைந்தபிறகு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.
தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தினகரன் தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை நடந்தது.
இந்நிலையில், அக்டோபர் 23(நாளை) இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்க உள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் சக்தி இருக்கும். அவர்கள் பின்னால்தான் தொண்டர்களும் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே சின்னத்தை மீட்க பழனிசாமி தரப்பும் தினகரன் தரப்பும் போராடி வருகிறது.
நாளை இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு வர உள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.