
ஜெயலலிதா மறைவுக்கும் பிறகு மத்திய அரசின் நிர்பந்தத்தால் ஓபிஎஸ் தமிழக முதலமைச்சராக்கப்பட்டார். ஆனால் கட்சியின் முழு அதிகாரத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கு சசிகலா குடும்பத்தினர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்க விரும்பினர். ஆனால் பா.ஜ.க அதை விரும்பாததால் ஏற்கனவே 2 முறை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சரானார்.
ஆனாலும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான முதலமைச்சராக காய்கள் நகர்த்தி வருவதால் ஓபிஎஸ் சசிகலாவிடையே பனிப் போர் நிலவி வருகிறது.
அதே நேரத்தில் ஆந்திராவுக்கு நேரடியாக சென்று சந்திர பாபுவை சந்தித்து குடிநீர் பெற்று வந்ததும், வர்தா புயலின் போது சிறப்பாக செயல்பட்டதும், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு டெல்லி சென்று பிரதமரை சந்தித்ததோடு மட்டுமல்லாமல்,அவசரச் சட்டம் கொண்டு வந்ததும் ஓபிஎஸ் க்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மாராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்டதால் முதலமைச்சரான உள்ள ஓ.பன்னீர்செல்வமே கோட்டையில் தேசியக் கொடியேற்றினார்.
தமிழக வரலாற்றிலேயே குடியரசு தினத்தன்று கோட்டையில் கொடியேற்றிய பெருமை ஓபிஎஸ்க்கு கிடைத்துள்ளது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனிடையே இந்த விழாவில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டிய சசிகலா குடும்பத்தினருக்கு ஓபிஎஸ் அனுமதி மறுத்திவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சி மற்றும் ஆட்சியில் முக்கிய பதவிகளை பெற சசிகலாவின் குடும்பத்தினரான நடராஜன், தினகரன், திவாகரன் ஆகியோர் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடியரசு தின விழாவில், தங்களை விவிஐபி-களாக காட்டிக்கொள்ள அவர்கள் முடிவெடுத்திருந்ததாகவும், ஆனால், கடைசி வரைக்கும் விவிஐபி அனுமதி சீட்டை அளிக்காமல், ஓபிஎஸ் அதை முறியடித்து விட்டதாகவும், கூறப்படுகிறது.
இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.