
அரசுப் பதவிகளில் அமர்த்துவதாகக் கூறி அணிகளை இணைத்துவிட்டு தற்போது எந்தவிதமான பதவியும் அளிக்கப்படாததால் பன்னீர்செல்வம் ஆதரவு சீனியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. மதுசூதனன், பொன்னையன், செம்மலை உள்ளிட்ட கட்சியின் சீனியர்கள் பன்னீர்செல்வத்துடன் இணைந்தனர்.
இதற்கிடையே தினகரனின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த அமைச்சர்களும் நிர்வாகிகளும் பழனிசாமியுடன் இணைந்து தினகரனை ஒதுக்க ஆரம்பித்தனர்.
சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியை விட்டு நீக்கினால், மீண்டும் இணைய தயார் என பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன.
பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியில் உள்ள சீனியர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்குவதாகவும் கூறி பழனிசாமி தரப்பு பன்னீர்செல்வம் அணியை இணைத்துக்கொண்டது. அதை மையமாக வைத்தே சீனியர்களை சமாதானப்படுத்தி பழனிசாமி அணியில் இணைத்தார் பன்னீர்செல்வம்.
பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் செம்மலை உள்ளிட்ட மற்ற சீனியர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. பதவி வழங்கப்படும் என அவர்கள் காத்திருந்தனர். ஆனால் காத்திருப்பு மட்டுமே நேர்ந்தது. எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
அணிகள் இணைப்புக்குப் பிறகு பன்னீர்செல்வம் ஆதரவு சீனியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற பேச்சு உள்ளது. பன்னீர்செல்வத்துக்கும் துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டாலும்கூட அதிகாரமற்றவராகவே அவர் வைக்கப்பட்டுள்ளார்.
இதனால் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என நினைத்த பன்னீர்செல்வம் ஆதரவு சீனியர்கள், மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். முதல்வர் பழனிசாமி தான் கண்டுகொள்ளவில்லை என்றால், நாம் ஆதரவளித்த பன்னீர்செல்வமும்கூட நம்மை கண்டுகொள்வதில்லை என்ற அதிருப்தி அவர்களிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக பன்னீர்செல்வத்திடமோ பழனிசாமியிடமோ முறையிடாமல் கே.பி.முனுசாமியிடம் சீனியர்கள் புலம்புகின்றனர். இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தனக்கு அதிகாரம் வழங்கப்படாதது தொடர்பாக மட்டும் டெல்லிக்கு சென்று பிரதமரிடம் முறையிடும் பன்னீர்செல்வம், எங்களைப் பற்றியும் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதி பற்றியும் கவலைப்படுவதே இல்லை.
எனவே அவரிடம் பேசுங்கள் அல்லது முதல்வர் பழனிசாமியிடம் இதுகுறித்து பேசுங்கள் என பன்னீர்செல்வம் ஆதரவு சீனியர்கள், கே.பி.முனுசாமியிடம் புலம்பித் தள்ளுகின்றனர்.
தானும் அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருக்குமாறும் முனுசாமி அவர்களிடம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுவது வரை பொறுமையாக இருந்து, அதன்பிறகு என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.