
மெர்சல் படத்தை, இணையத்தில் பார்த்ததாக கூறிய பாஜகவின் தேசிய தலைவர் ஹெச்.ராஜாவுக்கு, நடிகர் பார்த்திபன், தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியானது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே பல்வேறு சிக்கல்களை சந்தித்தது.
மெர்சல் திரைப்படம் வெளிவந்த நிலையில், படத்தில் இடம் பெறும் வசனங்களால் மேலும் சிக்கலை சந்தித்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. குறித்தும், பணமதிப்பிழப்பு குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த கருத்து பாஜக மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இல.கணேசன் உள்ளிட்ட பலர், மெர்சல் படத்தில் இடம் பெறும் வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்தவர்களும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். பாஜவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மெர்சல் காட்சிகளை இணையத்தல் பார்த்தேன் என்று கூறியிருந்தார். ஹெச். ராஜாவின் இந்த பேச்சு திரையுலைகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அவரின் இந்த பேச்சுக்கு நடிகர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தவறான முன்னுதாரணம் என்றும், இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது என்று குறிப்பிட்ட விஷால், தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டி மோ(டி)தி பார்க்க வைத்து விடுவார்களோ? வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜய்யம்!
மரியாதைக்குரிய எச்.ராஜாவுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும். அவர் களவாடி(யாய்) மெர்சல் கண்டிருந்தால்...! நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால், சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும், அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி! இவ்வாறு பார்த்திபன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.