அமைதிப்படை அமாவாசையாக வாழ்ந்த நாட்கள்: ஓ.பி.எஸ்ஸை வம்புக்கிழுத்த தினகரன் கேங் வாட்ஸ் ஆப்...

First Published Sep 22, 2017, 5:40 PM IST
Highlights
panneerselvam old image viral on whats app


தமிழக அரசியல் எத்தனையோ அடேங்கப்பா அரசியல் சம்பவங்களையும், அதிரடி அரசியல் தலைவர்களையும் பார்த்திருக்கிறது. ஆனால் அ.தி.மு.க.வில் தற்போது நிகழும் விஷயங்களும், தினகரன் எனும் அரசியல் ஆளுமையும் ரொம்பப் புதுசுதான். 

காரணம் தனது பலம் மற்றும் பலவீனம் எல்லாம் தெரிந்த பங்காளிகள்தான் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களை இயக்குவது இந்த தேசத்தின் சர்வ அதிகாரம் பொருந்திய மத்திய அரசு என்று அழுத்தமாக விமர்சிக்கப்படுகிறது. 

இத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் அடித்து ஆடுகிறார் மனிதர். அதுவும் சாதாரண ஆட்டமில்லை! ஒரு ஓவரில் குறைந்தது மூன்று பந்துகள் சிக்ஸருக்கு பறக்கின்றன. தான் விக்கெட்டை இழந்தாலும் அடுத்த ரவுண்டில் எதிரணியில் இரண்டு பேரை வீழ்த்துகிறார். 

மாநில அரசு மீது அவருக்கு பயமில்லாமல் போனதற்கு காரணம், முதல்வரும் துணை முதல்வரும் தன் குடும்பத்தால் வளர்க்கப்பட்டவர்கள் மற்றும் உயர்த்தப்பட்டவர்கள். நிச்சயம் ஒரு அளவைத் தாண்டி தன் மீது கை வைக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கலாம். ஆனால் மாநில அரசை இயக்குவதாக சொல்லப்படும் மத்திய அரசுக்கு தினகரன் மீது எந்த கரிசனமும் இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ஏற்கனவே ஒரு முறை அடித்தளமே இல்லாத புகாரில் அவரை தூக்கி திகாரில் உட்கார வைத்து அனுப்பியிருக்கிறது மத்தியரசு. ’சிறை பயத்தை காட்டிவிட்டோம். நிச்சயம் அடங்கி நடப்பார் தினகரன் என்கிற எண்ணத்தில்தான் அனுப்பினார்கள்.

ஆனால் நடப்பதோ தலை கீழ். மத்திய அரசின் தமிழக பிரதிநிதியான ஆளுநர் வித்யாசாகர் ராவை “பிடிச்சு வெச்ச பிள்ளையார்’ என்று விமர்சனங்களில் வெளுத்து வாங்குகிறார் தினகரன். 

அதே வேளையில் தமிழகத்தின் முதல்வரையும், துணை முதல்வரையும் அவர் புரட்டி எடுக்கும் ஆக்‌ஷன் பிளாக்குகளை புதிதாக விளக்க வேண்டியதில்லை. 

இந்நிலையில் தினா அண்ட்கோ இன்று ஒரு பழைய போட்டோவை அதிரடியாக இணையத்தில் உலவ விட்டிருக்கிறது. அது தினகரன் பெரியகுளம் எம்.பி.யாக இருந்த அந்த காலத்து போட்டோ. அதில் தினகரன் ஒரு விழா மேடையில் நடு நாயகமாக அமர்ந்திருக்க, அவரது பின்னே பவ்யமாக அமர்ந்திருக்கிறார் பழைய பன்னீர் செல்வம். அந்த போட்டோவின் கீழே ‘பன்னீர் செல்வம் அமாவாசை சத்தியராஜாக இருந்த காலத்தில் எடுக்கப்பட்டது’ என்று எகத்தாளமாக ஒரு கமெண்டையும் போட்டு ஷேர் செய்திருக்கிறார்கள். 

இது பன்னீர் தரப்பை பேய்த்தனமாக கடுப்பாக்கி இருக்கிறது. அதேவேளையில் நம்முடைய எந்த  பழைய பவ்ய போட்டோ எந்த கமெண்டுடன் வெளிவரப்போகிறதோ என்று அதிர்ந்து கிடக்கிறது எடப்பாடி கூடாரம். 

இப்படியொரு தெறி வாட்ஸ் ஆப் வைரலை கிளப்பிவிட்டு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டிருக்கும் கூர்க் பாடிங்க்டன் ரிசார்ட்டுக்கு சென்றிருக்கிறார் டி.டி.வி. இன்று அங்கே அவர்களுடன் தங்கி ஆலோசித்துவிட்டு நாளை அவர்களை அழைத்துக் கொண்டு தமிழகம் திரும்புகிறாராம். 

அதன் பிறகு அடுத்த அதிரடியில் இறங்குவாராம்!

click me!