
எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக ‘உள் கலவரம்’ பன்னீர்செல்வம் கோஷ்டி உள் கலவரம் செய்வது உறுதியே! என்கிறது கோட்டை வட்டாரம். இதற்கு முக்கிய காரணமாய் ‘தலைவர் பன்னீரை தொடந்து அவமதிக்கிறார்கள்.’ என்கிற வாதத்தைத்தான் மிக முக்கியமாய் முன்வைக்கிறார்கள் பன்னீரின் கைகள்.
ஜெ., மறைவுக்குப் பிறகு சசி தலைமையிலான அ.தி.மு.க.விலிருந்து அன்று பன்னீர்செல்வம் பிரிய மிக முக்கியமான காரணங்களில் ஒன்று போயஸ் வீட்டினுள் அவருக்கு நேர்ந்த அவமானங்கள்தான். முதல்வர் பதவியிலிருந்த பன்னீரை பதவி விலகிட சொல்லி நெருக்கடி கொடுத்தது சசி தலைமையிலான டீம். அவர் ‘ஏன்’ என்று கேட்டபோது, டாக்டர் வெங்கடேஷ் ஆவேசமான வார்த்தைகளை கூறி அவரது சட்டையிலேயே கை வைத்துவிட்டார் என்கிற அளவுக்கு பன்னீரின் ஆட்களால் கலங்கிய கண்களுடன் பிற்பாடு இந்த விஷயங்கள் பகிரப்பட்டன. ஆனாலும் இதுமட்டுமில்லை, பன்னீர் புரட்சி நடத்த பல அரசியல் காரணங்களும், மேலிட அழுத்தங்களுமே காரணம் என்று விமர்சகர்களால் சொல்லப்பட்டது தனி கதை.
இந்நிலையில், எடப்பாடி அணியுடன் பன்னீர் அணி இணைந்து 3 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் இப்போதும் ‘தலைவர் பன்னீருக்கு அவமரியாதை’ எனும் வாதத்தை முன்னிலைப்படுத்தி தான் உள் புரட்சிக்கு பந்தல்கால் நட்டுகிறார்களாம்.
மைத்ரேயன் மற்றும் மதுசூதனனால் கலவர மேகம் சூழ்ந்திருக்கும் நிலையில் பழனிசாமி மற்றும் பன்னீர் தரப்புக்கு இடையில் சமாதானம் செய்து வைக்கும் வகையில் சில நடுநிலை சீனியர் அ.தி.மு.க.வினர் முயன்றிருக்கிறார்கள். அவர்களிடம்தான் ‘தலைவர் பன்னீருக்கு இவங்க மரியாதையே கொடுக்குறதில்லை. தொடர்ந்து அவமானப்படுத்துறாங்க. எங்களுக்காக அவர் அதை பொறுத்துக்கலாம். ஆனா நாங்க இனியும் பொறுக்க முடியாது.’ என்று ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார்கள்.
என்னய்யா அவமானம்? என்று கேட்டபோது, பன்னீரின் ஆதரவாளர்கள் அவருக்கு நேர்ந்த அவமானமாய் சுட்டிக்காட்டிய விஷயங்கள்...
“கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் அப்படின்னு பெயரளவுல தலைவர் பன்னீருக்கு பதவிகள் இருக்குதே தவிர அதுக்கு உரிய மரியாதையில்லை.
ராயப்பேட்டையில உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும் விழாக்களில் ஓ.பி.எஸ்.ஸின் காரை ரோட்டில்தான் நிறுத்தி வைக்க சொல்றாங்க. ஆனா பழனிசாமியோட காரை அலுவலகத்துக்குள்ளே நிறுத்துறாங்க. கழக ஒருங்கிணைப்பாளர் காரை நிறுத்துறதுக்கு கட்சி அலுவலகத்தில் இடமில்லையா என்ன? அப்போ திட்டம் போட்டே அவரை அசிங்கப்படுத்துற வேலைதானே இது! உங்க கார் ரோட்டில் அப்படின்னா நீங்களும் கட்சிக்கு வெளியில ரோட்டுலதான் அப்படின்னு சொல்லாம சொல்ற வேலைதானே இது!
அதேமாதிரி ஆளுநர் நிகழ்ச்சி உள்ளிட்ட மிக முக்கியமான நிகழ்வில் தலைவர் பன்னீருக்கு மேடையில் இடம் கொடுக்காமல் அமைச்சர்களோடு கீழே உட்கார வைக்கிறாங்க. இதெல்லாம் என்ன நியாயம்?
தலைவர், அம்மாவுக்கு பிறகு முதல்வர் பதவியில் மக்களால் விரும்பப்பட்ட மனுஷனுக்கு கொடுக்குற மரியாதையா இதெல்லாம்? கொங்கு மண்டலத்துல நடக்குற அரசு விழாக்கள், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் தலைவர் பன்னீரின் பெயரை நிறைய பிளக்ஸ்களில் போடுறதேயில்லை. அப்படியே ஏதோ ஒரு போஸ்டர்ல போட்டாலும் ஓ.பி.எஸ்., அப்படின்னு சர்வ சாதாரணமா போடுறாங்க.
இவ்வளவு அவமானத்தையும் தாங்கிட்டு நாங்க கேவலம் பதவிக்காக வெட்கம் கெட்டுப்போயி இங்கே இருக்கணுமா? வேதனையா இருக்குது.” என்றார்களாம்.
மத்தியஸ்தம் செய்ய போன மனிதர்கள் தங்களுக்குள் ‘அடேய் காரை நிறுத்த இடமில்லைன்னு சொன்னதுக்கெல்லாம் உட்கட்சி கலவரமா?’ என்று நொந்துவிட்டு இதை அப்படியே பழனிசாமியின் தரப்பில் சொல்லி நியாயம் கேட்டனராம்.
அதற்கு “அவங்களும்தான் முதலமைச்சரை அவமானப்படுத்துறாங்க. தேனியில நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுல பன்னீர்செல்வத்தின் பெயரை கொட்டை எழுத்துல முதல்ல போட்டதோடு அவரை ‘மாண்புமிகு தமிழக முதல்வர்’ அப்படின்னு போட்டிருந்தாங்க. ஒரு துணை முதல்வரை எப்படி முதல்வர்ன்னு போடலாம். அவரோட பெயருக்கு கீழே அதைவிட சின்னதாகதான் தலைவர் எடப்பாடியாரின் பெயரை போட்டிருந்தாங்க.
அப்போ முதலமைச்சர் பதவியை வேணும்னே அசிங்கப்படுத்துறாங்கன்னு அர்த்தம். இதுக்கு நாங்க ஏதாச்சும் சொன்னோமா? அவங்க மட்டும் ஏன் குதிக்கிறாங்க?” என்றார்களாம்.
பஞ்சாயத்து பண்ணப்போனவர்கள் தலையிலடித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களோட அபிமானத்தை பெற்று, தேர்தல் வழியாக தலைவரும், அம்மாவும் வகிச்ச முதல்வர் பதவியில சந்தர்ப்பவசத்துல உட்காந்துகிட்டு இவங்க பண்ற கூத்தைப் பாருங்க! எந்த பெரிய விஷயமும் கஷ்டப்பட்டு கிடைச்சால்தானே அதோட அருமை புரியும்! என்று மனம் நொந்திருக்கிறார்கள்.
சர்தானே!