
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் யார் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும் தங்களது கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என பன்னீர்செல்வம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பழனிசாமி-பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகிய இரு அணிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், பிரமாணப்பத்திரங்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், அதிமுக சட்டவிதிகள் மற்றும் இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றை தீர ஆய்வு செய்து, இரட்டை இலை சின்னத்தை முதல்வர் பழனிசாமி-பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய அணிக்கு ஒதுக்கியது. கட்சி கொடி, கட்சியின் பெயர் என அதிமுக தொடர்பான அனைத்தையுமே பழனிசாமி அணியினர் பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு ஒருதலைபட்சமானது எனவும் நியாயமற்றது எனவும் தினகரன் தெரிவித்தார். எனவே உச்சநீதிமன்றத்தில், இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் எனவும் தினகரன் தெரிவித்திருந்தார்.
இரட்டை இலை ஒதுக்கீடு தொடர்பாக தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், அந்த வழக்கை விசாரிப்பதற்காக இரட்டை இலை முடக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, தினகரனுக்கு முன்னதாக பன்னீர்செல்வம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த கேவியட் மனுவில், இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து யார் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும், தங்களது கவனத்திற்கு கொண்டுவந்து, தங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் முன்னரே முன்னெச்சரிக்கையாக பன்னீர்செல்வம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தினகரனுக்கு இருந்த சிறிது நம்பிக்கையும் சிதைக்கப்பட்டுள்ளது.
சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்குகளில், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பையே உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.