
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட காரணம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் என்பதால், அவரது மறைவிற்குப் பிறகான கடந்த ஓராண்டாக அத்தொகுதி காலியாக உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன் சார்பில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார்களை அடுத்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. பணப்பட்டுவாடா செய்யப்பட்ட புகாரின் பட்டியலில் முதல்வரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக வருமான வரி சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாகவும், சோதனை நடத்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு கூட செய்யவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்தன.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துவிட்டுத்தான் மீண்டும் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், பணப்பட்டுவாடா புகார் காரணமாக நடந்த சோதனை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக நடவடிக்கை எதுவுமே எடுக்காமல், தேர்தல் ஆணையம் மீண்டும் இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.