
கடந்த சில மாதங்களுக்கு முன் “அம்மா கல்வியகம்” ஓ.பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார். இதன் மூலம் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி அம்மா கல்வியகத்தில் இணைந்து படித்து சமீபத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர், பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், மாநிலத்தின் சொந்த வருமானமான ரூ.86 ஆயிரம் கோடியில் ரூ.27 ஆயிரம் கோடியை கல்வித்துறைக்கு மட்டும் தனியாக ஒதுக்கினார்.
இதன் மூலம், ஏழை மாணவர்களுக்காக 16 வகையான உபகரணங்கள், லேப்டாப் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தற்போது திறன் மேம்பாட்டு பயிற்சி அனைத்து மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.
இதற்காகவே, “அம்மா கல்வியகம்” மூலம் விரைவில் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும். அதேபோல, வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு உள்பட பல்வேறு பணிகளுக்கு பயிற்சி அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.