
MLA For Sale என்ற டைம்ஸ் நவ் மற்றும் மூன் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆப்ரேஷன் தமிழக அரசியலை தேசிய அளவில் நாறடித்துக் கொண்டிருக்கிறது. விமான நிலையத்தில் 2 , கூவத்தூரில் 4 , தமிழக ஆளுநர் மாளிகைக்கு செல்லும் போது 6 கோடி என சசிகலா டீம் தங்களிடம் பேரம் பேசியதாக, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. கூறுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமீம் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட பிற கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு 10 கோடி ரூபாய் மற்றும் தங்க நகைகளும் அளிக்கப்பட்டதாவும், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு அதிகபட்சமாக 25 கோடியும், ஒரு பங்களாவும் அளிக்கப்பட்டதாக சரவணன் கூறியுள்ளார்.
நேற்று முன்புவரை தமிழக செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத தேசிய தொலைக்காட்சிகள், சரவணனின் பேர விவகாரத்தை நோன்டி நொங்கு எடுத்து வருகின்றனர்.
ஜனநாயக மாண்பை சீர்குலைக்கும் இது போன்ற நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் லஞ்சம் பெற்ற எம்.எல்.ஏ.க்களையும் அதிமுக அரசையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரண்டு போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்தச் சூழலில் திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் தமிழக அரசை டுவிட்டரில் வகை தொகை இல்லாமல் விமர்சித்துள்ளார். மக்களுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே ஒரு அரசு செயல்பட வேண்டும் என்றும், ஆனால் அதிமுக அரசோ பணத்திற்காக மட்டுமே செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.