
தமிழக சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தி தெளிவாக செயல்படும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுகவை யாராலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக வடிவமைத்து வைத்திருந்தார். அதிமுகவில் அமைச்சர்கள் என்று இருந்தாலும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பதிலக்கூடியவர் ஜெயலலிதா மட்டுமே.
அமைச்சர்கள் யாரும் வெளியே சென்று எந்த பேட்டியோ தனிப்பட்ட கருத்தோ தெரிவிக்க கூடாது என்பதில் மிகவும் ஸ்ரிக்டாக இருந்து வந்த ஜெயலலிதா டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
இதையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா பதவி ஏற்றார். அப்போது முதலமைச்சராக பதவியேற்ற பன்னீர்செல்வத்தின் பதவியை சசிகலா கைப்பற்ற நினைத்ததால் அதிமுக வரலாற்றிலேயே முதன் முதலாக கட்சி தலைமையை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார் ஒ.பி.எஸ்.
சில நாட்களுக்கு பிறகு பெரும்பான்மையின் ஆதரவோடு இ.பி.எஸ் முதலமைச்சராக பதவியேற்றார்.
பதவியேற்பதற்கு முன்னர் ஒ.பி.எஸ் தரப்பும், இ.பி.எஸ் தரப்பும் எம்.எல்.ஏக்களை இழுப்பதற்கு குதிரை பேரம் நடப்பதாகவும், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக எவ்வித மக்கள் பணியும் நடைபெறவில்லை எனவும் புகார் எழுந்தது.
அந்த புகாரை மெய்ப்படுத்தும் விதமாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதனால் தமிழக அரசு பெரிதும் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தி தெளிவாக செயல்படும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசுக்கு மக்களின் ஆதரவு கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.