
திருநெல்வேலியில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் திரண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர், பேசிய பன்னீர் செல்வம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கொள்கைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி ஜெயலலிதா ஆட்சி இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அதிமுக மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும், எம்.ஜி.ஆருடன் இருந்த அத்தனை பெரியோர்களும் தற்போது நம் அணியில் தான் உள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
இயக்க வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவரும் நம் தரப்பில் உள்ளபோது, யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என குறிபிட்டார்.
எக்காரணத்தை கொண்டும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்க கூடாது என்றுதான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஆசைபட்டதாகவும், ஆனால் தற்போது நிலைமையை மாற்ற சிலர் துடிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் தற்போது சரியாக இயங்கவில்லை எனவும் அம்மா குடிநீர் எங்கும் தாராளமாக கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் எந்த பிரச்சனையும் தீர்க்க தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி தலைமையிலான அரசு முன்வருவதில்லை எனவும், உண்மையான அதிமுக நாங்கள் தான் எனவும் தெரிவித்தார்.