
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்துக்கு தண்ணீர் பெற்று தந்தால் மகிழ்ச்சி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அய்யாக்கண்ணுவிடம், நடிகர் ரஜினிகாந்த், விவசாயிகள் போராட்டத்துக்கு முழு ஆதரவு உண்டு என்று கூறியதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார். அது மட்டுமல்லாது, நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கவும் ரஜினி கூறியதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், மதுரையில் இருந்து இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை, செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது பேசிய தமிழிசை சௌந்திரராஜன், கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்துக்கு தண்ணீர் பெற்று தந்தால் மகிழ்ச்சி என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சுய லாபத்துக்காக கட்சி நடத்தி வருகிறார் என்றார். மேலும், மாடு மேய்க்கக்கூட பிரதமருக்கு தகுதி இல்லை என திருமாவளவன் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.