
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடக்க இருந்தபோதும், தினகரனுக்கு ஆதரவாக தொப்பி அணிந்துகொண்டு முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் வாக்கு சேகரித்தனர். தற்போது தினகரன் ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவருக்கும் திமுகவும் எதிராக பிரசாரம் செய்து, மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர்.
அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு இரட்டை இலையையும் இழந்து நிற்கும் தினகரன், இந்த தேர்தலில் வெற்றி பெற்று தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு தங்களுக்குத்தான் உள்ளது என்பதை நிரூபிக்க போராடுகிறார்.
எப்படியும் அதிமுகவின் ஓட்டுவங்கி இரண்டாகப் பிரியப்போகிறது. வாக்குவங்கியின் பிரிவு, அதிமுக அரசின் மீதான அதிருப்தி ஆகியவற்றை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அறுவடை செய்து வெற்றியை பெற்றே தீர வேண்டும் என திமுகவும் தீவிரமாக செயல்படுகிறது.
இதற்கிடையே, லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் பத்திரிகையாளர் அன்பழகன் தலைமையிலான குழுக்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவிலிருந்து பிரதான போட்டி என்பது திமுகவிற்கும் தினகரனுக்கும் இடையிலேயே இருக்கும் என தெரிகிறது. அந்த இரண்டு கருத்து கணிப்புகளிலும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
திமுக, தினகரன், கருத்துக்கணிப்பு என அதிமுகவிற்கு இருக்கும் பல சவால்களையும் கடந்து வெற்றிக்காக போராடி வேண்டி உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு இடைத்தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக, அதற்காக வாக்குறுதிகளை அள்ளி எறிகிறது. மற்ற தொகுதியில் அதிமுக தோற்றாலும் பரவாயில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் தோல்வியடைந்தால், அது அதிமுகவிற்கு கடுமையான பின்னடைவாக அமையும். எனவே வெற்றி பெறும் முனைப்பில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் உள்ளனர் என்பதை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயமும் இருப்பதால், எந்த வாக்குறுதியை வேண்டுமானாலும் அளித்து வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் களமிறங்கியுள்ளனர்.
அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் ஆர்.கே.நகரில் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்து மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று வாக்கு சேகரித்தனர்.
பிரசாரத்தின்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களை வரிசைப்படுத்தினார். ஆர்.கே.நகர் தொகுதியில் அடிப்படை தேவைகளை ஜெயலலிதா பூர்த்தி செய்துள்ளார். வீடு கட்டித்தரப்படும் என ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். அதேபோல உங்களுக்கு வீடு கட்டித்தர ஆட்சியில் இருக்கும் எங்களால் முடியும். ஆனால் திமுகவாலோ தினகரனாலோ எப்படி முடியும்? மதுசூதனன் வெற்றி பெற்றால், உங்களின் கோரிக்கை மனுக்களை எங்களிடம் தருவார். நாங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத திமுகவோ தினகரனோ எப்படி நிறைவேற்றுவார்கள். அவர்களால் முடியாத விஷயத்தை வாக்குறுதிகளாக அளிக்கிறார்கள். எனவே ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார்.