
ஆர்.கே.நகர் காவல்நிலையம் எதிரெ உள்ள வீடு ஒன்றில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து பறக்கும்படையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
ஆனால் அதிமுகவை சேர்ந்த மதுசூதனனும் டிடிவியும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே திமுக இரு தரப்பின் மீதும் புகார்களை அள்ளி வீசுகிறது. இதுவரை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் காவல்நிலையம் எதிரெ உள்ள வீடு ஒன்றில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும்படையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அந்த குறிப்பிட்ட வீட்டில் பறக்கும்படையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.