பெங்களூரு வருகையால் பதறும் பழனிச்சாமி... பொய்ப் பிரசாரத்தை நிறுத்த பொன்முடி எச்சரிக்கை..!

By Asianet TamilFirst Published Feb 10, 2021, 9:43 PM IST
Highlights

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் இன்றுவரை பழனிசாமி நாடகம் ஆடி வருகிறார். அதுவும் பகல் வேடம், பச்சைப் பொய் வேடம் போடுகிறார் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி விமர்சித்துள்ளார்.
 

இதுதொடர்பாக க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்திற்கே சென்று தடை வாங்கிய முதல்வர் பழனிசாமி, 'பெங்களூரு வருகையால்' மனக்குழப்பத்திலும், சஞ்சலத்திலும், தடுமாற்றத்திலும், ஏன், என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்திலும் இருப்பது எல்லோருக்கும் புரிகிறது. அதனால் கூட்டம் தோறும் பிரசாரம் என்ற பெயரில், உண்மைக்கு மாறாக பேசுகிறார். அவரது இயலாமையை மறைக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விவாதத்திற்கு அழைக்கிறார். ஊழல் வழக்கில் ஓடோடிச் சென்று பெற்ற தடையுத்தரவை விலக்கிக் கொண்டு, எங்கு வேண்டுமானாலும் வாருங்கள்; நேருக்கு நேர் பேசுவோம் என்று திமுக தலைவர் ஏற்கனவே கூறி விட்டார்.


அதன் பிறகு அமைதியாக இருந்த முதல்வர் பழனிசாமி இப்போது மீண்டும், 'நேருக்கு நேர் விவாதம்' என்று, குத்துச் சண்டை பயில்வான் போல தொடை தட்டுகிறார். சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி வரக்கூடாது என்று தனது கீழ் உள்ள காவல்துறைத் தலைவரிடம் சொல்ல அஞ்சிய பழனிசாமி, டிஜிபி அலுவலகத்திற்கு அமைச்சர்களை அனுப்பி, புதுவித நிர்வாக நடைமுறையைக் கையாண்டார். அவர்களோ புகாரைக் கொடுத்து விட்டு வெளியில் வந்து பேட்டி கொடுக்கவே ஒருவருக்கு ஒருவர் பயந்து நடுங்கியதை பத்திரிகையாளர்கள் கண்டு ரசித்தார்கள். 'பெங்களூரு வருகையால்' மிரண்டு, கட்சியை கட்டிக்காக்க முடியாத பழனிசாமி, இப்போது தனது தோல்வியை மறைக்க, திமுக தலைவர் உதவிக்கரம் நீட்டுவாரா என்று பார்க்கிறார்.
பழனிசாமி, நீங்கள் இன்னும் திமுக தலைவரின் உயரத்திற்கு வரவில்லை என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முதல்வராக உச்ச நீதிமன்ற தடையை விலக்கிக் கொண்டு வாருங்கள், நாம் இருவரும் நேருக்கு நேர் விவாதிப்போம்! இது ஒருபுறமிருக்க, இலவச மின்சாரம் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்கள் மீது தடியடி நடத்தி கொத்துக் கொத்தாக கைது செய்தது அதிமுக ஆட்சி. போராடிய நாராயணசாமி நாயுடுவின் வரலாறு எல்லாம் முதல்வர் பழனிசாமிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால் விவசாயிகள் மீது திமுக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வழக்கம் போல், 'நான் டெண்டரில் ஊழல் செய்யவில்லை' என்று அப்பட்டமாகப் பொய் கூறுவது போல் ஒரு கோயபல்ஸ் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தருமபுரியில் மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற கட்சி அதிமுக. அந்த கொலை குற்றத்தில் தண்டனை பெற்று, சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்து, மூன்று மாணவிகளின் கொலையை நியாயப்படுத்திய, பெண்ணினத்திற்கே எதிரான கொடூர மனப்பான்மை கொண்டவர் பழனிசாமி. விவசாயிகளுக்காகப் போராடிய பேராசிரியர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குத் தொடுத்து கைது செய்து, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சி மகிழ்ந்த பழனிசாமிக்கு, திமுகவை நோக்கி சுண்டு விரலை நீட்டக்கூட தகுதியில்லை. கொரோனாவில் விவசாயிகள் அவதிப்பட்டபோது விவசாயத் தொழிலாளர் சங்கடத்தை அனுபவித்தபோது, 5,000 ரூபாய் கொடுக்க மறுத்து, அடாவடியாக என்னிடம் நிதி இல்லை என்று கூறியது பழனிசாமி தானே!
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் இன்றுவரை பழனிசாமி நாடகம் ஆடி வருகிறார். அதுவும் பகல் வேடம், பச்சைப் பொய் வேடம் போடுகிறார். குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று அவர் கூட்டணிக் கட்சியான பாஜகவே கூறிய பிறகும், மத்திய அரசின் சார்பில் அப்படியொரு வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த பிறகும் எதிர்த்து, 'முணுமுணுப்பை'க் கூட காட்ட முடியாமல் ஒரு நாள் 'பெங்களூரு வருகைக்கே' முடங்கிக் கிடந்த பழனிசாமிக்கு, அண்ணா காலம் முதற்கொண்டு, ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபட்ட திமுகவின் வரலாறு தெரியாது.
முதல்வர் பழனிசாமிக்கு இன்றுள்ள ஒரே சிந்தனை, பொழுது விடிந்தால் திமுக மீது என்ன பொய் சொல்வது? அதிமுக சாதித்தது என்று எந்த பொய்யைச் சொல்வது என்பதுதான்! 10 வருடம் மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஆட்சி செய்த அதிமுக, இப்போது நான்கு வருடங்களாக வெறும் டெண்டர் கொள்ளை - ஊழல் - கமிஷன் - கரெப்ஷன் – கலெக்ஷனுக்காக ஆட்சி நடத்தும் முதல்வர் பழனிசாமிக்கு விவசாயிகளுக்கு திமுக செய்த சாதனைகளையோ, செயல்படுத்திய முத்திரை பதிக்கும் திட்டங்களையோ, ஏன் ஈழத் தமிழருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்காக திமுக தலைவர் ஆற்றிய பணிகளையோ குறை கூற துளி கூட அருகதை இல்லை.
ஆகவே பொய் பேசி, அரசு விளம்பரத்தில் பொய்ப் பிரச்சாரம் செய்து, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம் என பழனிசாமி நினைத்தார். அது இப்போது 'பெங்களூரு' வருகையால் பிசுபிசுத்து விட்டது கண்டு பதறுகிறார்! ஆகவே, 'என்னால் இயலவில்லை. பதவி சுகமும், ஊழலில் மலை போல் குவிந்திருக்கும் கரன்சிகளும் என் கண்களை மறைக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு என்னை விட்டு விடுங்கள் ப்ளீஸ்' என்று கைகூப்பி தமிழக மக்களுக்குச் செய்துள்ள துரோகத்திற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு, ஓய்வு எடுத்துக் கொள்வதற்குப் பதில் தான் ஏதோ தமிழகத்தின் தனிப்பெருந் தலைவர் என்று நினைத்துக் கொண்டு திமுக தலைவரை விவாதத்திற்கு அழைப்பதோடு, மேடை தோறும் பொய்யும் புரட்டுகளையும் 'பிரச்சாரம்' என்ற பெயரில் உளறிக் கொட்டிவருகிறார்! ஊழலின் மொத்த உருவம் 'கோயபல்ஸ்' வடிவில் ஊர்வலமாகச் செல்வது தமிழக மக்களுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் ஏற்புடையதல்ல” என்று அறிக்கையில் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 

click me!