தவ வாழக்கையில் உள்ள ஓபிஎஸ் சதி... போலீஸை விட்டு விசாரிக்க எடப்பாடியாருக்கு துரைமுருகன் அதிரடி யோசனை..!

By Asianet TamilFirst Published Feb 10, 2021, 9:14 PM IST
Highlights

வீட்டுக்குள் உட்கார்ந்து எந்தக் கருத்தும் சொல்லாமல் தவ வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஏதாவது சதி செய்கிறாரா என்பதைக் காவல் துறையை விட்டு முதல்வர் பார்க்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கிருபானந்த வாரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல்வருக்கு இப்போது யாரோ ஒருவர் வாரியார் அரசு பிறந்த நாள் என்ற அறிவிப்பைச் செய்துள்ளார்கள். வாரியார் மறைந்தபோது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதாதான். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு உடல் வந்ததும் திமுக தலைவர் கருணாநிதி சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘ஞானப்பழம் ஒன்று முதிர்ந்து உதிர்ந்து விட்டது’ என்று அறிக்கை வெளியிட்டார்.


காங்கேயநல்லூரில் நடந்த வாரியாரின் உடல் அடக்கம் நிகழ்வுக்கு கருணாநிதி என்னை அனுப்பிவைத்தார். காங்கேயநல்லூரில் இருந்த வாரியார் உடலுக்கு குமரிஅனந்தன், கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் ஆகியோர் மட்டுமே வந்தனர். அடுத்தது நான் இருந்தேன். அவரது உடலை நான்கு தெருவிலும் சுமந்துசென்றோம். உடலைக் அடக்கம் செய்யும் வரை ஒரு மகனாக உடன் இருந்தேன். அவருக்கு சமாதி கட்டிய பிறகு கருணாநிதியை அழைத்துவந்து வாரியாரின் சமாதியைத் திறக்க வைத்து மரியாதை செய்தேன். எத்தனையோ தேர்தல் வந்தும்கூட அதிமுகவினர் வாரியாருக்கு மரியாதை செலுத்தியதில்லை. இப்போது அரசு விழா என்று அறிவித்தால் மக்கள் ஏமார்ந்து ஓட்டு போட்டுவிடுவார்கள் என யாரோ முதல்வருக்குச் சொல்லி இருப்பார்கள். அவருக்கு உரிய மரியாதை செலுத்தாதது அதிமுக அரசுதான்.


வரலாற்றில் நானறிந்த வரை அரசியலில் தண்டனை பெற்று உள்ளே இருந்து வெளியே வர ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டவருக்கு வரலாறு காணாத வரவேற்பு தருவது இங்கேதான். நாளை தியாகத்துக்கும் கொள்ளைக் கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் சூழல் உள்ளது. ஊழல் செய்து சேர்த்த சொத்துகளை அரசுடைமையாக்குவதில் எங்களுக்கு மாற்றுகருத்தில்லை. எடப்பாடியார் அதிமுகவுக்கு நாங்கள் எந்தப் பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் வீட்டுக்குள் உட்கார்ந்து எந்தக் கருத்தும் சொல்லாமல் தவ வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஏதாவது சதி செய்கிறாரா என்பதைக் காவல் துறையை விட்டு முதல்வர்தான் பார்க்க வேண்டும்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 

click me!