‘பாகிஸ்தான் அரசுக்கு மனிதத் தன்மையே கிடையாது’ சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம்

 
Published : Dec 29, 2017, 09:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
‘பாகிஸ்தான் அரசுக்கு மனிதத் தன்மையே கிடையாது’ சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம்

சுருக்கம்

Pakistan does not have humanity...sushma

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாய்க்கு பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாட்டை விதித்தது. இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் அரசுக்கு மனிதத் தன்மையே கிடையாது என்று கூறினார்.

கடற்படை அதிகாரி

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியில் இருந்தவர் குல்பூஷன் ஜாதவ். இவர் ஈரான் நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் ஈரான் வழியாக பலூசிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி, அந்நாட்டுக்கு எதிரான சதிவேலையில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் போலீஸார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது.

சர்வதேச நீதிமன்றம்

எனினும், இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடுத்தது. அதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், தூக்குத் தண்டனையை நிறைவேற்ற கடந்த மே மாதம் இடைக்காலத் தடை விதித்ததுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் தீவிர முயற்சிக்குப் பின்னர் குல்பூஷன் ஜாதவை, அவரது தாயார் அவந்தி, மனைவி சேதன்குல் ஆகியோர் கடந்த திங்களன்று சந்தித்துப் பேசினர். உணர்ச்சிகரமான இச்சந்திப்பு கண்ணாடி தடுப்புக்கிடையே நடைபெற்றது.

பாகிஸ்தான் பயணம்

டெல்லியில் இருந்து துபாய் வழியாக இஸ்லாமாபாத் சென்ற அவர்கள் இருவரும், அங்குள்ள இந்தியத் தூதரகத்துக்கு முதலில் சென்றனர். அங்கு சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்டர்காம் உரையாடல்

குல்பூஷன் ஜாதவ் தனது தாய் மற்றும் மனைவியுடன் "இன்டர்காம்' தொலைபேசியில் உரையாடினார். அப்போது, அவந்தி மற்றும் சேதன்குல்லிடம் இருந்த தாலிக் கயிறு, கம்மல் உள்ளிட்ட ஆபரணங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கழற்றினர். கிட்டத்தட்ட விதவைகளைப் போலத்தான் குல்பூஷனை இருவரும் சந்தித்தனர். போதாக்குறைக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் தேவையில்லாத கேள்விகளை எழுப்பி இருவருக்கும் மன ரீதியான பிரச்னையை அளித்தன.

நாடாளுமன்றத்தில் அறிக்கை

பாகிஸ்தானின் அடாவடிப் போக்குக்கு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-

பாகிஸ்தானின் இந்த சந்திப்பு வெறும் நாடகம் என்னும் உண்மை இப்போது வெளிச்சமாகியுள்ளது. ஒரு பெண் என்றும் பாராமல் அவரின் உடை மற்றும் காலணிகளை மாற்றியுள்ளனர். மேலும், அவர்களின் தாலியும் அகற்றப்பட்டு, நெற்றியிலிருந்த பொட்டும் அழிக்கப்பட்டு அவர்களுக்கு விதவைக் கோலத்தை பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலைய சோதனை

இது மனிதாபிமானமற்ற கொடூரச் செயலாகும். இந்த சம்பவத்தால் ஒருவரின் தனிமனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

காலணியில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று பாகிஸ்தான் கூறும் பதிலை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்கள் இருவரும் இங்கிருந்து துபாய் வரை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தாலும், துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு எமிரேட்ஸ் விமானத்தின் மூலமாகவே பயணித்தனர்.

இரட்டை முகம்

ஒவ்வொரு விமான நிலையங்களிலும் அனைத்து பயணிகளும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர். அவ்வாறு இருக்கையில் உளவு பார்க்கும் வசதி கொண்ட காலணிகள் அதில் சுலபமாக தெரியவந்திருக்கும்.

இதிலிருந்தே பாகிஸ்தானின் இரட்டை முகம் வெளிப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அரசு கூறிய தேதியில்தான் இந்த சந்திப்பும் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது ஊடகங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி, அவர்கள் நாட்டின் ஊடகங்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளனர்.

மன அழுத்தம்

மேலும், குல்பூஷனை சந்தித்த பின்னர், பேட்டியெடுத்த செய்தியாளர்கள் அவர் குற்றவாளி என்பது போன்று பரப்புரைகளை மேற்கொண்டனர். மேலும், இதனை அவரது தாய் மற்றும் மனைவியிடமும் கூறி மனஅழுத்தம் கொடுத்துள்ளனர்.

மொத்தத்தில் குல்பூஷன் ஜாதவின் தாய் மற்றும் மனைவிக்கு இந்த சந்திப்பு முழுவதும் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மனரீதியிலான அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்