வெறுப்புணர்ச்சியைக் கொட்டும் பாகிஸ்தான் !! குடியரசுத் தலைவர் விமானம் பறக்க அனுமதி மறுத்ததால் பரபரப்பு !!

By Selvanayagam PFirst Published Sep 7, 2019, 9:52 PM IST
Highlights

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 9ஆம் தேதி முதல் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் போது புல்வாமா தாக்குதல் உட்பட எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகள் குறித்து அந்த நாடுகளின் உயர் தலைமைக்குக் குடியரசுத் தலைவர் எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்வதற்குப் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா, அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது. ஆனால் குடியரசு தலைவர் செல்லும் விமானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

குடியரசுத் தலைவர் செல்லும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமத் குரேஷி தெரிவித்திருக்கிறார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. 
இதையடுத்து கடந்த பிப்ரவரி 26 அன்று முதல் பாகிஸ்தான் தனது வான்வெளியை முழுமையாக மூடியது. கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் தனது வான்வெளி வழியைத் திறந்தது. எனினும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!