பரிதவிக்க விட்டுப்போன பக்கிரி சாமி... இழந்து வாடும் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Feb 27, 2020, 12:37 PM IST
Highlights

தன் உடல்நலம் பற்றிக்கூட அக்கறை காட்டாமல், தனது தொகுதி மக்கள் குறித்தும், குறிப்பாக மீனவர் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் என்னிடம் பேசுவார்.

சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சாமி, பலனின்றி இன்று காலமானார். முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும் - திருவெற்றியூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி மறைவையொட்டி, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவெற்றியூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி திடீரென்று மறைவெய்தினார் என்ற இதயத்தை கலங்க வைக்கும் துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் சுறுசுறுப்பு மிக்க தொண்டராகவும், கழக வளர்ச்சிப் பணிகளில் கள வீரராகவும் செயல்பட்ட கே.பி.பி.சாமி இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், மாநில மீனவர் அணி செயலாளர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர். மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய அவர், மீனவர்களின் நலனே தன் தலையாய பணி என்ற உயரிய நோக்கில்- அவர்களின் பிரச்சினைகளுக்காக  கலைஞர் அவர்களிடமும், துணை முதலமைச்சராக இருந்த என்னிடமும் வாதாடி பல நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உற்ற துணையாகவும், மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காகவும் இருந்தவர். திராவிட இயக்க கொள்கைகளை தன் நெஞ்சில் மீது ஏந்தி எப்போதும் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்த அவர்- சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் என்றைக்கும் மறக்க இயலாதது.

இடையில் அவர் உடல் நலம் குன்றியிருந்த போது, அவரை நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்திருக்கிறேன். அந்த நேரங்களில் தன் உடல்நலம் பற்றிக்கூட அக்கறை காட்டாமல், தனது தொகுதி மக்கள் குறித்தும், குறிப்பாக மீனவர் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் என்னிடம் பேசுவார். அந்த அளவிற்கு தொகுதி மக்களுக்காகவும், மீனவர் சமுதாயத்திற்காவும் இரவு பகலாக பணியாற்றும் ஒரு செயல் வீரரை இந்த தொகுதி மக்கள் இழந்து வாடுகிறார்கள். 

கழகத்தின் போராட்டங்களை முன்னின்று நடத்திடவும், உற்சாகமிக்க கழகத் தொண்டர்களை உருவாக்கவும் ஆர்வம் குறையாமல் தொடர்ந்து உழைத்து வந்த கே.பி.பி.சாமியை இழந்து நானும், தி.மு.க தொண்டர்களும் தவிக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மீனவர் சமுதாய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் காசி விஸ்வநாதர் குப்பத்தில் பிறந்து வளர்ந்த கே.பி.பி.சாமி பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை பரசுராமன் சூட்டிய பக்கிரிசாமி என்ற பெயரை அரசியலுக்காக கே.பி.பி.சாமி என அந்தக்காலத்திலேயே மாற்றிக்கொண்டவர். அந்தக்கால சினிமாபடங்களில் பக்கிரி என்ற பெயரில் வழிப்பறி கொள்ளையர்கள் மற்றும் ரவுடி கதாபாத்திரங்கள் இருக்கும். இதனால் பக்கிரி என்பதை வெட்டிவெட்டு வெறும் சாமியாக வலம்வரத் தொடங்கினார்.

click me!