
குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. இசைத் துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக இசை ஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவையொட்டி மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும. இந்த வகையில் 2018 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி இசைத் துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக இசை ஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் ராமசாமி- சின்னத்தாயம்மாள் மத்பதிகளுக்கு மகனாக பிறந்தார். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய சகோதரர்கள். இளையராஜாவின் மனைவி பெயர் ஜீவா. இளையராஜாவுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர், பவதாரிணி என 3 பிள்ளைகள் உள்ளனர்.
இளையராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் கங்கை அமரன் மற்றும் அவரின் பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே ஆர்மேோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் இளையராஜா தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை இளையராஜா தனது சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் இளையராஜ சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்,
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார்.
அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ்.ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொன்னு ஊருக்கு புதுசு,போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கர்நாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளா ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்ற பாடல்கள் இளையராஜாவுக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.
இளையராஜா, இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார்.
லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார்.
இளையாராஜா பெற்ற விருதுகளும், பட்டங்களும் ஏராளம்
இதே போல் இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
1985இல் - சாகர சங்கமம் ( தெலுங்கு)
1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
2009இல் - பழஸிராஜா (மலையாளம்)
2016இல் - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)
இதே போல் மருத்துவர் எம்.ஆர்,. ராஜகோபால் , நாகசாமி, ஞானம்பாள், தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன்,விஞ்ஞானி அரவிந்த குப்தா, இயற்கை மருத்துவர் லெட்சுமி குட்டி , ஓவியர் பாஜூஷியாம் ,சமூக ஆர்வலர் சுதான்சுபிஸ்வாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், தொல்லியல்துறை ஆய்வாளர் நாகசாமி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.