வெட்டி பேச்சை விட்டுட்டு காசை வசூல் பண்ற வழிய பாருங்க... மோடி அரசுக்கு ப.சிதம்பரம் நறுக் ட்வீட்..!

By vinoth kumarFirst Published Apr 30, 2020, 2:27 PM IST
Highlights

 ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா

மல்லையா உள்ளிட்ட 50 பணக்காரர்களின் கடன் விவகாரத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து பணத்தை வசூல் செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களையும், அவர்களின் வாராக் கடன்களை பற்றியும்  ரிசர்வ் வங்கி மூலம் தகவல் பெற்றிருந்தார். அதில், நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்டோரின் ரூ.68,607 கோடி கடன்  தள்ளுபடி செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா!. இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு. 

ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

click me!