நீங்க எடுத்ததுல எது சரியான முடிவு.? நீங்களே சொல்லுங்க பிரதமரே... ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

By Asianet TamilFirst Published Jul 28, 2020, 8:49 PM IST
Highlights

சரியான முடிவுகளை எடுத்ததால் கொரொனா கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோடி கூறிய நிலையில், எதெல்லாம் சரியான முடிவு என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. என்றபோதும், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உலகுக்கு வழிகாட்டுவதாக பிரதமர் மோடி கூறிவருகிறார். மேலும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம் என்றும் பிரதமர் மோடி பெருமையாகக் குறிப்பிட்டுவருகிறார். ஆனால், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் எப்போது கட்டுக்குள் வரும் என்று தெரியாத நிலையில், வேலையிழப்பு, வேலை முடக்கம், சம்பள வெட்டு என மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரங்களை வைத்து காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியையும் பாஜகவையும் விமர்சித்துவருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கேள்விகளை ப.சிதம்பரம் எழுப்பியுள்ளார். அதில், “சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம் என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா? கோடிக்கணக்கான தினக்கூலி வேலை பார்ப்பவர்கள, சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா?
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி, வீட்டை இழந்து பட்டினி கிடந்தார்களே - சரியான முடிவா? ரயில்கள் இன்றி, பஸ் இன்றி பல லட்சம் மக்கள் பல நாறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று தமது சொந்த ஊர்களை அடைந்தார்களே - சரியான முடிவின் விளைவா? பல கோடி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றனவே - இது சரியான முடிவுகளின் பயனா? ஊரடங்கு விதிகளைத் தளர்த்திய பிறகும் வேலையிழந்த கோடிக்கணக்கானவர்கள் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்களே - சரியான முடிவுகளின் பயனா?” என கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார் ப. சிதம்பரம்.

click me!